

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஊழியர்களின் பணிப்பாதுகாப்பு, மக்கள் எதிர்ப்புகள் ஆகியவை குறித்து தமிழக அரசு தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தேசிய-மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. கடைகள் மூடப்பட்டிருந்தாலும் மதுபெட்டிகளும், தளவாடப்பொருட்களும் கடைக்குள்ளேயே வைத்துக்கொண்டு ஊழியர்களை பொறுப்பாக்கியுள்ளது. கடைகள் மூடப்பட்டு 15 நாட்களாகியும் ஊழியர்களுக்கான மாற்றுப்பணி குறித்து டாஸ்மாக் நிர்வாமும், அரசும் முறையான அறிவிப்பு செய்யவில்லை. இதனால் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தினசரி டாஸ்மாக் அலுவலங்களில் தங்களுக்கு என்ன பணி என்பது தெரியாமல் காத்துக்கொண்டிருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அமலாக்கும் பொறுப்பில் உள்ள மாவட்ட ஆட்சியர்களிடம் ஊழியர்களின் பிரச்சனைகளில் தலையிட்டு தீர்வு காண கோரி 7.4.2017 அன்று சிஐடியு சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
அதே நேரத்தில் மூடப்பட்ட கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையில் அரசு அதிகாரிகளும், டாஸ்மாக் அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடை ஊழியர்கள் மாற்று இடம் பார்க்க வேண்டுமென்ற நிர்ப்பந்தமும் செய்யப்படுகிறது. மாற்று இடத்தில் கடை அமைக்கும் போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் மீண்டும் கடை மூடும் நிலை ஏற்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விருதுநகர் மாவட்டத்தில் முத்தழகு, தேனி மாவட்டத்தில் சரவணக்குமார் ஆகிய ஊழியர்கள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். இது தமிழக அரசின் முறையற்ற நடவடிக்கையால் ஏற்பட்ட விபரீத சம்பவங்களாகும். இதுபோன்ற துயரமான மனநிலைக்கு ஊழியர்கள் செல்லாமல் இருக்க டாஸ்மாக் நிர்வாகம் நம்பிக்கையான நடவடிக்கையை எடுத்திட வேண்டும்.
டாஸ்மாக் கடை பிரச்சனையில் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் மக்களின் எதிர்ப்புகளையும், ஊழியர்களின் பணி பாதுகாப்பையும் குறித்து கவனத்தில் கொள்ளாமல் வருவாயை மட்டுமே கணக்கில் கொண்டு செயல்படுவது மக்கள் நல அரசுக்கு அழகல்ல.
தமிழக அரசு, மக்களின் எதிர்ப்புகளையும், ஊழியர்களின் மாற்றுப்பணி குறித்தும் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமென்றும், மரணமடைந்த ஊழியர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணமும், வாரிசு வேலையையும் வழங்கிட ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலியுறுத்துகிறது.