

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா, நவம்பர் 23-ம் தேதி தொடங்கி டிசம்பர் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 5-ம் தேதி மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் பந்தல்கால் முகூர்த்தம் நேற்று நடந்தது.
சம்மந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, விழா தொடங்கியது. அண்ணா மலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன் ஆகியோருக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கொடி மரம் அருகே பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கொடிமரத்தை பரம்பரை வழக்கப்படி ரகுநாதன் என்பவர் சுமந்து வந்தார். கோயிலை வலம் வந்ததும், தேரடி வீதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பஞ்ச ரதங்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. திருக்கார்த்திகை தீபப் பெருவிழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்காக கன்யா லக்னத்தில் கற்பூர தீபாராதனை செய்யப்பட்டு, ராஜகோபுரம் முன்பு நேற்று காலை 6.10 மணிக்கு பந்தல்கால் நடப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், அண்ணா மலையார் கோயில் கண்காணிப் பாளர் விவேகானந்தன் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.