ஓசூரில் 1,550 அடி நீள தேசியக் கொடியுடன் பேரணி: 4 ஆயிரம் மாணவர்கள் ஏந்திச் சென்றனர்

ஓசூரில் 1,550 அடி நீள தேசியக் கொடியுடன் பேரணி: 4 ஆயிரம் மாணவர்கள் ஏந்திச் சென்றனர்
Updated on
1 min read

ஓசூர் நகரில் 70-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழ கத்திலேயே முதல்முறையாக 1,550 அடி நீளமுள்ள தேசியக் கொடி பேரணி நடைபெற்றது.

ஓசூர் நகரில் உள்ள வாசவி கிளப் சார்பில் “வாக் பார் தி நேஷன்” என்ற தலைப்பில் 70-வது சுதந்திர தின விழா பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியின் சிறப்பு அம்சமாக 1,550 அடி நீளமுள்ள தேசியக் கொடியை சுமார் 4 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகள், உற்சாகமுடன் ஏந்திச் சென்றனர். இந்த பேரணி ஓசூர் நகரில் உள்ள வேளாங்கண்ணி பள்ளி முன்பாக உள்ள நகராட்சி பூங்காவில் இருந்து புறப்பட்டது. காலை 7 மணியில் இருந்தே சீருடையில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் குவியத் தொடங்கினர்.

காலை 10 மணியளவில் மாண வர்கள் குழு நடத்திய மகாத்மா காந்தி வரலாறு பற்றிய வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு காலை 11 மணியளவில் 1,550 அடி நீளமுள்ள தேசியக் கொடி பேரணியை ஓசூர் சார் ஆட்சியர் மருத்துவர் செந்தில்ராஜ் மற்றும் ஓசூர் நகரமன்றத் தலைவர் ராமு ஆகியோர் தொடங்கி வைத்தனர். பேரணி முகப்பில் இசைக் குழுவினரும், 200 அடி தேசியக் கொடியை பிடித்தபடி மகளிர் குழுவினரும் சென்றனர். அவர்களை அடுத்து சாரணர் இயக்க மாணவர்கள் அணிவகுத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து 1,550 அடி நீளமுள்ள தேசியக் கொடியை சுமார் 4 ஆயிரம் மாணவ, மாணவியர் ஏந்தி பிடித்து ‘வந்தே மாதரம்’ என முழக்கமிட்டபடிச் சென்றனர்.

இந்தப் பேரணி சார் ஆட்சியர் அலுவலகம், அரசு பொது மருத்துவ மனை, பழைய தொலைபேசி அலுவலகம் வழியாகச் சென்று, காமராஜர் காலனியில் உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி மைதானத்தை அடைந்தது. பேரணி சென்ற வழியில் மாடி வீடுகளில் இருந்து பொது மக்கள் 1,550 அடி நீளமுள்ள தேசியக் கொடி மீது வண்ண மலர்கள் தூவி வாழ்த்துக் கூறி முழக்கமிட்டது கண்கொள் ளாக் காட்சியாக இருந்தது.

இந்த சிறப்புமிக்க 70-வது சுதந்திர தின விழா பேரணியில் ஓசூர் சார் ஆட்சியர் மருத்துவர் செந்தில்ராஜ், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப் பினர் கே.ஏ.மனோகரன், ஓசூர் நகர காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in