

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் மறைவுக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் செய்தியில் புகழஞ்சலி தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி:
ஆளுநர் கே.ரோசய்யா: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதனின் மறைவுச் செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியடைந்தேன். உழைக்கும் வர்க்கத்த்தினர், தொழிற்சங்கங்கத்தினர், அடித்தட்டு மக்கள் ஆகியோருக்கு ஏ.பி.பரதன் பெரும் பங்களிப்பை செய்துள்ளார். பரதனின் மறைவு தொழிலாளர் வர்க்கத்துக்கு பேரிழப்பாகும். பரதனின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் ஜெயலலிதா: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் உடல் நலக்குறைவு காரணத்தால் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். உழைக்கும் வர்க்கத்துக்கும், ஏழை மற்றும் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கும் சுயநலம் பாராது தொண்டாற்றிய பரதன், பல்வேறு அரசியல் சக்திகளை ஒன்றிணைத்து இந்திய அரசியலில் சமீபத்திய திருப்புமுனைக்கு முக்கிய பங்காற்றினார். தன்னலமற்ற சேவை, அரசியல் நாகரிகத்தின் மறுவடிவமாக திகழ்ந்த ஏ.பி.பரதனுடன் பொதுத்தலங்களில் இணைந்து இயங்கும் வாய்ப்பு பெற்றதையும், பலமுறை அவர் எனது இல்லத்துக்கு வந்ததையும் பெருமையாக கருதுகிறேன். ஏ.பி.பரதனின் மரணம் இந்திய அரசியல் வானில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
கருணாநிதி (திமுக தலைவர்): இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியுற்றேன். சுதந்திரப் போராட்டம், தொழிலாளர்கள் போராட்டம், மக்கள் பிரச்சினைக்கான போராட்டம் என தன்னை ஒரு போராளியாக முன்னிறுத்திப் போராடியவர் ஏ.பி.பரதன். கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் என்னுடனும் திமுகவுடன் நல்ல தோழமையுடன் பழகிய பரதனின் மரணத்தால், ஒரு சிறந்த நண்பரை நான் இழந்து விட்டேன்.
வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்): இடதுசாரிகளின் ஒற்றுமையும், முற்போக்கு சிந்தனையாளர்கள் ஒன்றிணைய போராடிய ஏ.பி.பரதனின் மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கும், இந்திய நாட்டுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
விஜயகாந்த் (தேமுதிக தலைவர்): சிறந்த தொழிற்சங்கவாதியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஏ.பி.பரதன், தொழிலாளர்களுக்காகவும் ஏழை, எளியவர்களுக்காகவும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளார். அவரது நினைவும், புகழும், பெருமையும் இந்திய அரசியலில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
ராமதாஸ் (பாமக நிறுவனர்): ஏ.பி.பரதன், தன்னை 75 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் அர்ப்பணித்துக் கொண்டவர். வாழ்நாளில் 4.5 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த அவர், 2 ஆண்டு காலம் தலைமறைவு வாழ்க்கையிலும் இருந்தார்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர், மத்திய செயற்குழு என கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்து தேசிய பொதுச் செயலாளர் ஆனார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய திட்டம் உருவாக அவரே மூளையாக இருந்தார். அவரது மறைவையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கொடி ஒரு வாரத்துக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதற்கான போராட்டங்களில் மகத்தான பங்காற்றியவர் ஏ.பி.பரதன். இந்திய கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறவை பலப்படுத்தினார். அவருடைய மறைவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல இடதுசாரி இயக்கத்திற்கே பேரிழப்பாகும்.
ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்காகவும் தன்னை முழுமையாக அற்பணித்து கொண்ட ஏ.பி.பரதனின் மறைவு நாட்டுக்கே பேரிழப்பாகும்.
இவ்வாறு அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தியில் தெரிவித்தனர்.