

வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்வது தொடர்பாக 5 நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டத்திருத்தத்தை உடனடியாக வாபஸ் பெறக்கோரி வழக்கறிஞர்கள் இன்று சென்னையில் ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
உயர் நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையில் அனைத்து நீதிபதிகளும் அடங்கிய முழு அமர்வு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி வழக்கறிஞர் சட்டத்திருத்தம் குறித்த பிரச்சனைகளை ஆய்வு செய்வது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், எஸ்.நாகமுத்து, எஸ். ராஜிவ் ஷக்தேர், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நீதிபதி பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப் பட்டுள்ளது.
இந்தக் குழுவினர் வழக்கறிஞர் கள் சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகளை பரிசீலித்து சட்டத்திருத்தத்தில் மாறுதல்களை செய்ய பரிந்துரைப்பர்.
இந்நிலையில் இந்த சட்டத்திருத்தங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் துணைத் தலைவர் கினிமானுவேல், செயலாளர் அறிவழகன், முன்னாள் துணை தலைவர் முரளி, பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர் நளினி, செயலாளர் ரேவதி, வழக்கறிஞர் சுதா உள்ளிட்டோர் சட்டத்திருத்தத்தை திரும்பபெறக்கோரி கோஷம் எழுப்பினர்.
அப்போது பேசிய வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், இன்று காலை இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடற்கரை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.