8 நாட்களுக்கு பிறகு கூவத்தூரில் இருந்து சென்னை வந்த அதிமுக எம்எல்ஏக்கள்
கூவத்தூரில் தனியார் சொகுசு விடுதியில் கடந்த 8 நாட்களாக தங்கவைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் நேற்று பிற் பகல் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் கல் பாக்கம் அடுத்த கூவத்தூர் பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் அதிமுக எல்எல்ஏக்கள் கடந்த 8-ம் தேதி இரவு முதல் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். அதிமுகவில் பல்வேறு அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்து வந்ததால் கூவத்தூர் கிராமத்திலும் தினமும் பதற்ற நிலை காணப்பட்டது.
இந்நிலையில், 8-வது நாளாக கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் தங்கியிருந்த நிலையில், அதிகாலை முதலே ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து, விடுதிக்கு அமைச் சர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் வந்து சென்ற தால், விடுதி வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.
காலை 10 மணிக்கு அதிமுக வின் சட்டமன்றக் குழுத் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச் சர்கள் ஆளுநரை சந்திப்பதற்காக விடுதியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். இதனால், எப்போது வேண்டுமானாலும் அழைப்பு வரலாம் என்ற பரபரப் புடன் அதிமுகவினர் விடுதி வளாகத்தில் அமர்ந்திருந்தனர்.
இதற்கிடையே துணை சபா நாயகர் தம்பித்துரை, விடுதிக்கு வந்து எம்எல்ஏக்களுடன் ஆலோ சனை நடத்தினார். பிற்பகல் 12.20 மணியளவில் ஆட்சியமைப்பதற் காக ஆளுநரிடம் இருந்து அழைப்பு வந்ததாக அதிமுகவினர் தெரிவித் தனர். இதைத் தொடர்ந்து, ஆர வாரத்தில் ஈடுபட்ட அதிமுகவினர், விடுதி வளாகத்துக்கு வெளியே பால் பாயசம் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சுமார் 1.30 மணியளவில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விடு திக்கு வந்ததைத் தொடர்ந்து, விடுதியில் கடந்த 8 நாட்களாக தங்கவைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக் கள், விடுதி வளாகத்தில் நடன மாடினர். பின்னர், எம்எல்ஏக்களின் உடமைகளை எடுத்துக் கொண்டு அவர்களது உதவியாளர்கள் வெளியே வந்தனர். பின்னர், ஒரு காரில் 5 முதல் 6 எம்எல்ஏக்கள் என்ற எண்ணிக்கையில் எம்எல்ஏக் கள் புறப்பட்டனர்.
அப்போது, காரில் எத்தனை எம்எல்ஏக்கள் செல்கின்றனர் என, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன் னிலையில் குறிப்பெடுத்துக் கொண்டனர். அதன் பின்னரே எம்எல்ஏக்களின் கார்கள் விடுதியில் இருந்து புறப்பட்டுச் சென்றன. இதனால், விடுதி வளாகத்தில் கடந்த 8 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்துகள் காலியாக சென்றன. இதையடுத்து, கடந்த 8 நாட்களாக கூவத்தூரில் நீடித்த பரபரப்பு குறைந்தது.
போலீஸார் கிளம்பினர்
விடுதி வளாகத்தில் கடந்த 3 நாட்களாக பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டிருந்த போலீஸார், எம்எல்ஏக்கள் புறப்பட்டு சென்ற பிறகு, உணவருந்திவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். விடுதியின் முகப்பு பகுதியில் மட்டும் சில போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.
