

முதல்வர் கே.பழனிசாமி அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி கொண்டு வரப்பட்ட முதல்வர் கே.பழனிசாமி அரசு மீதான நம்பிக்கைத் தீர்மானம் செல்லாது என அறிவிக்கக் கோரி மு.க.ஸ்டாலி்ன் உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை ஜூலை 11-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த பிப்ரவரி 18-ம் தேதி தமிழக முதல்வர் கே.பழனிசாமி அரசுக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்ட நம்பிக்கைத் தீர்மானம் வெளிப்படையாக, நேர்மையாக நடைபெறவில்லை. சபாநாயகர் அனைத்து விதிகளையும் மீறி முதல்வர் கே.பழனிசாமி அரசு கொண்டு வந்த தீர்மானத்தை வெற்றி பெற வைத்துள்ளார். நான் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும், அதிமுகவில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியபோதும் அதை சபாநாயகர் ஏற்கவில்லை. அவர் நடுநிலைமையுடன் செயல்படவில்லை. எனவே சட்டப்பேரவையின் ஜனநாயக மரபுகளைக் காப்பாற்ற, அந்த நம்பிக்கைத் தீர்மானம் செல்லாது என அறிவித்து புதிதாக வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் தொடர்ந்த வழக்கு இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த ஜூன் 12-ம் தேதி சில தனியார் செய்தி சேனல்கள், வீடியோ ஆதாரங்களை வெளியிட்டன.
அதில் மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.எஸ்.சரவணன், “முதல்வர் கே.பழனிசாமி அரசு கொண்டு வந்த நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெறுவதற்காக அதிமுக எம்எல்ஏக்களுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.6 கோடி வரையிலும் லஞ்சம் கொடுக்கப்பட்டது. அதேபோல அதிமுக ஆதரவு எம்எல்ஏ-க்களான கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகியோருக்கு ரூ. 10 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.
நான் ஏற்கெனவே தொடர்ந் துள்ள வழக்குக்கு அதிமுக எம்எல்ஏ சரவணனின் இந்த வீடியோ ஆதாரம் முக்கியமான சாட்சியமாகும். எனவே அதிமுக எம்எல்ஏ.க்களுக்கும், ஆதரவு எம்எல்ஏ.க்களுக்கும் லஞ்சமாக வழங்கப்பட்ட பணம் மற்றும் தங்க நகைகள் குறித்து சிபிஐ மற்றும் வருவாய் குற்றப் புலனாய்வுத்துறையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
எனவே ஏற்கெனவே நாங்கள் தொடர்ந்த வழக்கில் சிபிஐ மற்றும் வருவாய் புலனாய்வுத் துறையையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து, அந்த தனியார் டிவி-க் களின் வீடியோ ஆதாரங்களைக் கைப்பற்றி அது தொடர்பாக முழுமையாக விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.