

பிரதிநிதித்துவப் படம்
ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விவசாயிகளின் ஆதரவை பெற அரசியல் கட்சிகளிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
தொழில் நகரான ஓசூரில் தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையிலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓசூரில் நடைபெற்ற அரசு விழாவில் அறிவித்தார். இந்த அறிவிப்பை ஓசூர் பகுதியில் உள்ள அனைத்துக் கட்சியினர் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட அனைவரும் வரவேற்றனர்.
தொடர்ந்து, தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிக்கோ) பல்வேறு கட்ட ஆய்வுக்குப் பின்னர் ஓசூர் மற்றும் சூளகிரி இடையே 2,980 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்து, இந்திய விமான நிலைய ஆணையத்தின் அனுமதிக்கு அனுப்பியுள்ளது. மேலும், திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்த அரசு நிர்வாக அனுமதி கோரி ஆட்சியருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், விமான நிலையம் அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்த 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, தொடர் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விவசாயிகள் எதிர்ப்பைத் தேர்தலில் தங்களுக்கு சாதகமாக்க அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்பி நரசிம்மன் உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருவதோடு, விவசாயிகள் கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.
இதற்கிடையில், ஓசூரில் விமான நிலையம் அறிவிப்பு வெளியானது முதல் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி மக்கள் பிரதிநிதிகள் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வந்தனர். தற்போது, விவசாயிகளின் எதிர்ப்பு தங்களுக்கு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என அதிர்ச்சியடைந்துள்ளதோடு, உள்ளூரில் தங்கள் செல்வாக்கை இழக்க விரும்பாத நிலையில், ஓசூர் அருகே முத்தாலி கிராமத்தில் நேற்று முன்தினம் (28-ம் தேதி) நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்பி கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டு, விவசாயிகளை பாதிக்காத வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதி அளித்தனர்.
கூட்டத்திற்குப் பின்னர் எம்பி கோபிநாத், செய்தியாளர்களிடம் கூறும்போது, “இப்பகுதியில் விமான நிலையம் சாத்தியம் இல்லை, இதுதொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். விவசாயிகள் தைரியமாக இருக்க வேண்டும். அதேபோல நாமும் நமது பகுதியும் வளர்ச்சியடைய வேண்டும் என்றால் ரயில்வே மற்றும் சர்வதேச துறையிலான திட்டங்கள் நமக்கு தேவை.
அதேநேரம் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதை பார்த்துக் கொள்வது எங்கள் கடமையாகும். சர்வதேச விமான நிலையம் அமைக்க ஓசூரில் 1,500 ஏக்கரும், வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை தொகுதியில் 5,000 ஏக்கரும் அரசு நிலம் உள்ளது. எனவே, விமான நிலைய திட்டத்துக்கு அரசு நிலங்களை பயன்படுத்திக் கொள்ள பரிந்துரை செய்வோம்” என்றார்.
எது எப்படி என்றாலும், வரும் தேர்தலில் ஓசூர் சர்வதேச விமான நிலைய திட்டம் அரசியல் கட்சிகளின் பிரதான வாக்குறுதியாக மாறுவதற்கு முன்னோட்டமாக தற்போது, இத்திட்டம் தொடர்பான ஆதரவும், எதிர்ப்பும் றெக்கைக் கட்டி பறக்க தொடங்கியுள்ளது.