

மு.க.அழகிரி மீதான அதிருப்தி நிலையை மாற்றிக்கொண்டு கருணாநிதி சமாதானமாகி விட்டதாகவும், இதனால் அழகிரி சந்தோஷத்தில் இருப்பதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து, அழகிரி ஆதரவாளர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப் பெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன்பு மதுரையில் ஒட்டப்பட்ட சர்ச்சைக் குரிய சுவரொட்டிகளால் திமுகவில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மதுரை மாநகர் மாவட்ட கட்சி அமைப்புகள் கலைக்கப்பட்டு, ஸ்டாலின் ஆதரவாளர்கள் கொண்ட பொறுப்புக்குழு நியமிக்கப்பட்டது.
அடுத்த சில நாட்களில் தனி யார் தொலைக்காட்சிக்கு அழகிரி அளித்த பேட்டியின் தொடர்ச்சியாக மன்னன், முபாரக் மந்திரி உள்ளிட்ட அழகிரி ஆதரவாளர்கள் 5 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர். பின்னர் கோபாலபுரம் வீட்டுக்கு வந்த அழகிரி, கருணாநிதியை சந்திக்காமலே சென்றார். ஆனால் கடந்த 12-ம் தேதி கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியை அழகிரி சந்தித்துப் பேசினார். சந்திப்பு குறித்து அழகிரியிடம் கேட்டபோது, தந்தைக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த தாக கூறினார். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள் தனது ஆதரவாளர்கள் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை கருணாநிதியை அழகிரி மீண்டும் சந்தித்தார். அப்போது மதுரையில் நடந்த விவகாரங்களை அழகிரி எடுத்துக் கூறியுள்ளார்.
‘தென்மண்டல அமைப்புச் செயலாளராக நான் இருக்கிறேன். ஆனால் தென்மாவட்ட உள் கட்சித் தேர்தலில், ஸ்டாலின் ஆதர வாளர்கள் எனக் கூறிக்கொண்டு, ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினருக்கு விண்ணப்பங்கள் கொடுக்கக்கூட மறுக்கின்றனர். இதேநிலை நீடித்தால், நாடாளு மன்றத் தேர்தலில் கோஷ்டிப் பிரச்சினையால் திமுகவின் ஓட்டு சதவீதம் குறைய வாய்ப்புள்ளது’ என்று அழகிரி கூறியதாகவும் அதைக் கேட்டு கருணாநிதி சமாதானமாகி விட்டதாகவும் கட்சித் தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
தந்தை சமாதானமானதால் அழகிரி சந்தோஷத்தில் இருப்ப தாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் திங்கள்கிழமை அதிகாலை மகன் துரை தயாநிதி மற்றும் மன்னன், முபாரக் மந்திரி, உதயகுமார் உள்ளிட்ட ஆதர வாளர்களுடன் ஹாங்காங் புறப்பட்டு சென்றுவிட்டார். ஐந்தாறு நாட்களுக்குப் பிறகு அவர் மதுரை திரும்பவுள்ளார்.