

வத்தலகுண்டு அருகே மர்மக் காய்ச்சல் பரவிய மேலக்கோயில்பட்டி கிராமத்தில் நடமாடும் மருத்துவ முகாம் மூலம் கிராம மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், மேலக்கோயில்பட்டியில் வீட்டிற்கு ஒருவர் ராணுவத்தில் பணிபுரிகின்றனர். இந்த கிராமத்தில் பலர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். சிறுவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இது குறித்த செய்தி `தி இந்து’ நாளிதழில் வெளியானது. இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் உடனடியாக கிராமத்தில் மருத்துவ முகாம் மற்றும் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ள சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று தண்ணீரை அதிக நாட்கள் தேக்கி வைத்திருப்பதை கண்டு அவற்றை அகற்றினர். கிராமத்தில் கொசு மருந்து முழுமையாக அடிக்கப்பட்டது. கிராமத்தில் நடமாடும் மருத்துவ முகாம் அமைத்து பொதுமக்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது.