

கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து, காவல் நிலையத்தில் கையெழுத்திடச் சென்றவரை மர்மநபர்கள் வெட்டிக்கொலை செய்தனர்.
விருத்தாசலம் செல்வராஜ் நகரைச் சேர்ந்த சேட்டு என்கிற விக்னேஷ்வரன் (24),கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த செந்தில்ராஜ் கொலை வழக்கில் சிறை சென்று நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.பின்னர் விக்னேஷ்வரன் விருத்தாசலம் காவல் நிலையத்தில் தொடர்ந்து கையெழுத்து போட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல், காவல் நிலையத்தில் கையெழுத்து போடுவதற்காக பைக்கில் சென்றுள்ளார். அப்போது, தனியாருக்கு சொந்தமான கண்மருத்துவமனை அருகே சென்ற போது காரில் வந்த மர்ம நபர்கள் விக்னேஷ்வரனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.தகவலறிந்த விழுப்புரம் சரக டிஐஜி அனிஷா உசேன் விருத்தாசலம் டிஎஸ்பி கார்த்திகேயன் ஆகியோர் நேரில் சென்று சம்பவம் குறித்து விசாரித்தனர். இதைத்தொடர்ந்து, விக்னேஷ்வரனின் உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனிடையே சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்