

இந்த ஆட்சி மீது ஒட்டுமொத்த மக்களும் அதிருப்தியில் உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் உணர்வு வெளிப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சென்னை ஆதம்பாக்கத்தில் நடந்த போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
போராட்டத்தில் பங்கேற்றது குறித்து உதயநிதி அளித்த பேட்டி:
திடீரென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டது ஏன்?
நானும் திமுகவின் உறுப்பினர்தான். ‘இது ஒரு கட்சியின் பிரச்சினை கிடையாது. தமிழகத்தின் பிரச்சினை. அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்’ என அப்பா தெளிவாக அறிக்கை வெளியிட்டு இருந்தார். தற்போது அமைந்திருக் கும் அரசின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். கூவத்தூரில் நடந்த காமெடியை அனைவருமே பார்த்தோம். தேர்தலில் வாக்களித்துள்ளேன். அந்த உரிமையில் போராட்டத்தில் கலந்துகொண்டேன்.
அதிமுகவில் வாரிசு அரசியல் அதிகமாக உள்ளது என்பது திமுகவின் குற்றச்சாட்டு. ஆனால், தற்போது நீங்கள் திடீரென்று முன்னிலைப் படுத்தப்படுகிறீர்களே?
எனக்கு பதவி எல்லாம் கொடுக்கவில்லை. ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டேன். கலைஞரின் பேரன், ஸ்டாலின் பையன் என்பதால் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். தேர்தலில் போட்டியிட சீட் கேட்பேன் என்றெல்லாம் சொல்லவில்லை. கட்சியிலும் எந்தப் பதவியையும் கேட்கவில்லை. போராட்டத்தில் மக்களோடு உட்காரத்தான் சென்றேன். ஆனால், வலுக்கட்டாயமாக இழுத்து மேடையில் உட்கார வைத்துவிட்டார்கள்.
நிறைய மாணவர்கள், பெண்கள் பேசினார்கள். அவர்கள் பேசியதைப் பார்க்கும்போது மக்களிடையே இந்த ஆட்சியின் மீதிருக்கும் ஆதங்கத்தை உணர்ந்தேன். உள்ளாட்சித் தேர்தல் வரப்போகிறது. அதில் கண்டிப்பாக மக்களின் உணர்வு தெரிந்துவிடும்.
தற்போதைய ஆட்சி, சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து?
அதற்கெல்லாம் கருத்து சொல்லும் அளவுக்கு எனக்கு தகுதியில்லை. ஒரு பார்வையாளனாக கேட்டால், அரசு மீது அதிருப்தியில் உள்ளேன். சிறையில் இருந்துகொண்டு ஒருவர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். சினிமாவில் நடிப்பதால் நிறைய மக்களோடு பழகக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களும் அதிருப்தியில்தான் இருக்கிறார்கள்.
ஆட்சி குறித்து தொடர் விமர்சங்களை வைத்த கமல்ஹாசனின் இயக்கப் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளாரே?
கமல் சாருக்கு இப்போதுதான் அடக்கு முறை. கடந்த 6 ஆண்டுகளாக எனக்கு அடக்கு முறைதானே. நான் அரசியலில் இல்லை. திரைப்படத்துறையில்தான் இருக்கிறேன். ஆனாலும், திமுக குடும்பத்தைச் சார்ந்தவன் என்பதால், தொடர்ச்சியாக பழிவாங்கிக் கொண்டேதான் இருக்கிறார்கள். அந்த நிலை தற்போது கமல் சாருக்கு வந்துள்ளது.
இவ்வாறு உதயநிதி தெரிவித்தார்.