

நடிகர் ரஜினிகாந்தை தங்கள் பக்கம் இழுக்க மேற்கொண்ட முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த பாஜக புதிய திட்டங்களை வகுத்து வருகிறது. இதன் அடுத்த அஸ்திரமாகவே தமிழக பாஜக பொறுப்பாளராக ராஜீவ் பிரதாப் ரூடி நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக, அடுத்தகட்டமாக மாநிலங்களில் கட்சியை பலப்படுத்தி ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்திலும் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை தேசிய தலைமை மேற் கொண்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த பாஜக, நடிகர் ரஜினிகாந்தை தங்கள் பக்கம் இழுக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.
கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, பலமுறை ரஜினியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அவரது தூதுவர் ரஜினியை சந்தித்ததாகவும் கூறப்பட்டது. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நவராத்திரி கொலு விழாவுக்காக ரஜினி வீட்டுக்கு சென்றார். அப்போது, ரஜினி பாஜகவுக்கு வர வேண்டும் என்பதை அவரது குடும்பத்தாரிடம் வலியுறுத்தினார். ஆனால், யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம் என நினைத்த ரஜினி, தான் எந்தக் கட்சியிலும் சேரப் போவதில்லை என்று ஒதுங்கி விட்டார்.
ரஜினியை இழுக்கும் முயற்சி பின்னடைவு ஏற்பட்டதால் அடுத்த கட்டமாக கட்சியைப் பலப்படுத்த வேறு வழிகளை பாஜக தலைமை மேற்கொண்டுள்ளது. அதற்காகவே பிஹார் மற்றும் மகாராஷ்டிரத்தில் பாஜகவை சாதிக்க வைத்த ராஜீவ் பிரதாப் ரூடியை தமிழக பொறுப்பாளராக நியமித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக தமிழக பாஜக மூத்த தலைவர்கள் சிலர் கூறியதாவது:
பாஜகவை தமிழகத்தில் காலூன்ற செய்ய வேண்டும் என்பது கட்சி மேலிடத்தின் நீண்ட நாள் கனவு. தமிழகத்தில் பல சீனியர் தலைவர்கள், இருந்தபோதி லும் தேசிய செயலாளராக இருந்த தமிழிசைக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழிசை அரசியல் பாரம்பரியமுள்ள குடும்பத்தை சேர்ந்தவர். அதைவிட முக்கியமான விஷயம், அவரது கணவர் சவுந்தரராஜன், சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் சிறுநீரக மாற்று சிகிச்சை துறை தலைவராக உள்ளார். ரஜினிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக பிரச்சினை ஏற்பட்டபோது, சவுந்தரராஜன் பரிந்துரையின் பேரில்தான், அவர் சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
தமிழிசையும் பலமுறை ரஜினியை தொடர்பு கொண்டார். ஆரம்பத்தில் இதை ரஜினி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், மீடியாக்கள் தொடர்ந்து பூதாகரமாக்கவே, இதனால் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் ‘லிங்கா’ படத்துக்கு பிரச்சினை வந்துவிடக் கூடாது என்று நினைத்து, பாஜகவில் சேரும் எண்ணம் எதுவும் தனக்கு இல்லை என்று தனக்கு நெருக்கமானவர்களை விட்டு கூறியுள்ளார்.
இந்தச் சூழலில்தான் தமிழகத் தின் புதிய பொறுப்பாளராக மோடி மற்றும் அமீத் ஷாவுக்கு நெருக்கமான ராஜீவ் பிரதாப் ரூடி நியமிக்கப்பட்டார். மகாராஷ்டிரத் தில் சிவசேனாவுடனான 25 ஆண்டு கால கூட்டணியை முறித்துக் கொண்டு தனித்துப் போட்டியிட்ட பாஜக, 122 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. அந்த மாநில பொறுப்பா ளராக இருந்த ரூடி, தீவிரமாக செயல்பட்டும், 700 கூட்டங்களை நடத்தியும் பாஜக வெற்றிக்கு வழி வகுத்தார். அதை மனதில் வைத்துதான் இப்போது, தமிழக பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ரஜினிகாந்த் விஷயத்தில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, 2016 தேர்தலில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் ரூடியை பாஜக தலைமை களமிறக்கியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.