

காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவுக்கு, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், திருவாரூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடக மாநிலத்துக்கு முழுமையாக உதவுவேன், அந்த மாநிலத்துக்கு ஆதரவாக இருப்பேன் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரின் இந்தக் கருத்து, இந்திய அரசியல் சாசனத்துக்கும், இறையாண்மைக்கும் எதிரானது. இந்தக் கருத்தை அவர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையேல், சென்னையில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம். மேலும், உச்ச நீதிமன்றத்திலும், குடியரசுத் தலைவரிடமும் புகார் மனு அளிக்க உள்ளோம்.
பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையை உயர்த்திக் கட்டியுள்ள ஆந்திர அரசை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும், அங்கு உள்ள கனக நாச்சியம்மன் கோயிலில் வழிபடும் உரிமையையும் பறிக்க ஆந்திர அரசு முயற்சிக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநில அரசுகள் தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன. காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி, இந்த மாதத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு விட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், நதி நீர் ஒழுங்காற்றுக் குழுவை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்றார்.