

மேலடுக்கு சுழற்சி உருவாகியிருப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோரப் பகுதிகளில் அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் கடந்த ஜூன் 20-ம் தேதிக்கு முன்பு வரை வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் தற்போது வடக்கு தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் வெப்ப சலனத்தால் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. அதன் காரணமாக சென்னையில் காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் சென்னை முழுவதும் காலை முதல் மாலை வரை குளிர்ந்த சூழல் நிலவியதுடன், குளிர்ந்த காற்றும் வீசியது. இதுநாள் வரை இருந்து வந்த வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள், திடீரென குளிர்ந்த சூழல் நிலவியதும் மகிழ்ச்சிக்குள்ளாயினர்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: வடக்கு தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோரப் பகுதிகளில் அனேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒருசில இடங்களில் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 93.2 டிகிரி பாரன்ஹீட் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 75.2 டிகிரி பாரன்ஹீட் ஆகவும் இருக்கும்.
இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக மதுரையில் 92.84 டிகிரி பாரன்ஹீட், தூத்துக்குடியில் 92.66 டிகிரி பாரன்ஹீட், சென்னையில் 90.5 டிகிரி பாரன்ஹீட், வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மழையை பொருத்தவரை, அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 51.5 மி.மீ, வால்பாறையில் 46.8 மி.மீ, வேலூரில் 43.9 மி.மீ, சேலத்தில் 18.7 மி.மீ, தருமபுரியில் 17 மி.மீ மழை பதிவாகியுள்ளது'' என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.