

தமிழகத்தில் ஏப்ரல் 2, 30-ம் தேதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் கே.குழந்தைசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இரண்டு கட்டங்களாக போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும். இந்த முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படு கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி இந்த ஆண்டு 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி திட்டம் சிறப்பு முகாம் கடந்த மாதம் 6-ம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் உள்ள 1 கோடியே 76 லட்சம் குழந்தை கள் மற்றும் சிறுவர்களுக்கு வரும் 14-ம் தேதி வரை தடுப்பூசி போடப்படுகிறது.
இதனால் இந்த ஜனவரி மற்றும் பிப்ர வரி மாதங்களில் நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் நடை பெறவில்லை. தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறாத தால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் கே.குழந்தை சாமியிடம் கேட்ட போது, “தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி திட்ட சிறப்பு முகாம் நடைபெறுவதால் போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிப்போனது. தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 2-ம் தேதி முதல் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாமும், ஏப்ரல் 30-ம் தேதி இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாமும் நடைபெறும்” என்றார்.