

டாஸ்மாக்
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு 20 சதவீத போனஸ் தொகை வழங்கப்படும் என்று டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்ளுக்கு 20 சதவீதம் போனஸ் தொகை வழங்கப்பட உள்ளது. 2025 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரையான ஓராண்டு கால கட்டத்துக்கு இந்த போனஸ் கணக்கிடப்பட்டுள்ளது.
இதில் 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை அடங்கும். இதன் அடிப்படையில் பணியாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.16,800 போனஸ் தொகை வழங்கப்படும். மேலும், இதற்கான மாத அடிப்படை ஊதிய உச்ச வரம்பு ரூ.7,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிதி விடுவிப்பு: பணியாளர்களுக்கு போனஸ் வழங்குவதற்கான நிதி, மாவட்ட மேலாளர்களின் செயல்பாட்டுக் கணக்குக்கு இன்று (நவம்பர் 4) அனுப்பி வைக்கப்படும். நிதி ஒதுக்கப்பட்ட உடனே தாமதமின்றி பணியாளர்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக போனஸ் தொகையைச் செலுத்த வேண்டும். உரிய ரசீதுகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
போனஸ் வழங்கிய பிறகு உபரி நிதி ஏதேனும் மீதமிருந்தால், அதனை அலுவலகத்தின் இதர செலவீனங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை ஒதுக்கப்பட்ட நிதி போதவில்லை எனில், மாவட்ட மேலாளர் அல்லது கிடங்கு கணக்கில் உள்ள இருப்பில் இருந்து அந்தப் பற்றாக்குறையை ஈடு செய்து பணியாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.