

காந்தி, அன்பழகன், அருள்முருகன்
புதுச்சேரி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் 2 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பாஜக சார்பில் காரைக்கால் தெற்கு தொகுதிக்கான வேட்பாளரும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் என்டிஏ கூட்டணியில் 10 தொகுதிகள் பாஜகவுக்கு அறிவிக்கப்பட்டன. பாஜக சார்பில் போட்டியிம் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டனர். விடுபட்ட ஒரு தொகுதியான காரைக்கால் தெற்கு தொகுதிக்கான பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மாநில தலைமை செய்தி தொடர்பாளர் அருள்முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் என்டிஏ கூட்டணியில் இடம் பெற்றுள்ள அதிமுகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. உப்பளம் தொகுதிக்கு மாநில செயலாளரான முன்னாள் எம்எல்ஏ அன்பழகன், உருளையன்பேட்டை தொகுதிக்கு முன்னாள் துணை செயலாளர் காந்தி ஆகியோர் வேட்பாளர்களாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
உப்பளம் தொகுதி அதிமுக வேட்பாளர் அன்பழகன், கடந்த 2001-ம் ஆண்டு முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 2006, 2011, 2016 என நான்கு முறை தொடர்ந்து வெற்றி பெற்றார். கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்ட இவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது ஆறாவது முறையாக மீண்டும் உப்பளம் தொகுதியில் அன்பழகன் களம் இறங்குகிறார்.