

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பிரச்சாரத்தின்போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் புகையாலும், வெளியூரில் இருந்து குவிந்துள்ள தொண்டர்களின் வாகனங்களால் ஏற்படும் போக்கு வரத்து நெரிசலாலும் தொகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் 62 பேர் போட்டியிடு கின்றனர். பிரச்சாரத்துக்கு ஒரு வார அவகாசம் மட்டுமே இருப்பதால், வேட்பாளர்களும், அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள கட்சி நிர்வாகிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தொகுதியில் குறுகிய தெருக்கள் அதிகம் உள்ளன. வெளியூர் நிர்வாகிகள் கொண்டு வரும் கார்கள், பைக்குகள் சாலையோரத்தில் நிறுத்தப்படு கின்றன. ஏற்கெனவே இத்தொகுதி யில் கனரக லாரிகளாலும், ரயில்வே கேட் பிரச்சினையாலும் கடும் போக்குவரத்து நெரிசலை மக்கள் சந்தித்துவரும் நிலையில், வெளியூர் நிர்வாகிகளின் வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது.
இதனால், தண்ணீர் லாரிகள், ஆம்புலன்ஸ்கள்கூட தெருக்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. மேலும் அங்கு வெடிக்கப் படும் பட்டாசுகளால் ஏற்படும் புகை மூட்டமும் மக்களுக்கு பெரும் தொந்தரவாக அமைந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
கொருக்குபேட்டை ஆனந்த்: இங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், குழந்தைகளை நேரத் துக்கு பள்ளிக்கு அனுப்ப முடிய வில்லை. நேரத்தோடு வேலைக்குச் செல்ல முடியவில்லை.வீட்டி லிருந்து வாகனத்தை வெளியில் எடுப்பதே சிரமமாக உள்ளது. ஏற் கெனவே ரயில்வே கேட் பிரச்சினை யால் அவதிப்பட்டோம். இப்போது இடைத்தேர்தலால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப் படுகிறோம். வெளியூர் வாகனங் களை தொகுதிக்குள் அனுமதிக்கக் கூடாது. போக்குவரத்துக்கு இடை யூறாக நிறுத்தப்படும் வாகனங் களை அப்புறப்படுத்த வேண்டும்.
தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பிரேமா: வாகனங்களை ஆங்காங்கே நிறுத்துவதால், குடிநீர் லாரிகள் தெருவுக்குள் வரமுடியவில்லை. உரிய நேரத் துக்கு தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படுகிறோம். இன்னும் சில நாட்களுக்கு இதை சகித்துக் கொள்ள வேண்டியதுதான். தேர்தல் முடிந்தால்தான் நிம்மதி.
கொடுங்கையூர் சிவக்குமார்: பிரச்சாரத்தின்போது, குறுகலான தெருக்களில்கூட பட்டாசு வெடிக் கின்றனர். கோடையில் ஏற் கெனவே தீவிபத்து அபாயம் அதிகம். இதில், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சரவெடிகளை வெடிப்பதால், வீடுகளில் விழுந்து வெடிக்கும் ஆபத்தும் இருக்கிறது. தவிர, பட்டாசுகளால் புகைமூட்டம் ஏற்பட்டு, சுவாசிக்க முடியாமல் முதியோர், குழந்தைகள், நோயாளிகள் அவதிப்படுகின்றனர். பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறலும் ஏற்படுகிறது. போக்கு வரத்து நெரிசலைக்கூட சகித்துக் கொள்ளலாம். பட்டாசு தொந்தரவு தான் தாங்கமுடியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுபற்றி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் கேட்டபோது, ‘‘தொகுதிக்குள் வலம்வரும் வெளியூர் வாகனங்களையும், பட்டாசு வெடிப்பதையும் தடுப்பதற் காக போக்குவரத்து, தீ தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் சட்ட விதி களை ஆய்வு செய்து வருகிறோம்’’ என்றார்.