தேசிய நெடுஞ்சாலையோர கடைகளில் மாம்பழங்கள் விற்பனை விறுவிறுப்பு: மாம்பழ சீசன் தொடக்கம்

தேசிய நெடுஞ்சாலையோர கடைகளில் மாம்பழங்கள் விற்பனை விறுவிறுப்பு: மாம்பழ சீசன் தொடக்கம்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள கடைகளில் மாம்பழங்கள் விற்பனை தொடங்கியது.

மாம்பழ உற்பத்தில் முதலிடம் வகிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சுவை மிகுந்த ரகங்களான அல்போன்சா, மல்கோவா, பங்கனப்பள்ளி, பெங்களூரா, பீத்தர், செந்தூரா, நீலம் போன்ற வகை மாம்பழங்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன.

தரமான மாம்பழங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாமரங்கள் பொதுவாக டிசம்பர் இறுதி வாரம் முதல் ஜனவரிவரை பூ பூக்கும்.

நிகழாண்டில் மாமரங்களில் பூக்கள் நிறைந்து காணப்பட்டது. போதிய மழையின்மை, வறட்சியால் மாவிளைச்சல் போதிய அளவில் இல்லாத நிலையில், தற்போது மாம்பழங்கள் விற்பனைக்காக மண்டிகளுக்கு வர தொடங்கியுள்ளது.

மண்டிகளில் இருந்தும், தோட்டங்களிலிருந்து விவசாயிகள் மாம்பழங்களை வாங்கி வந்து கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ் சாலையில் பையூர் அருகே சாலை யோரம் விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர். இவ்வழியே செல்வோர், சாலையோரம் வாகனங் களை நிறுத்தி மாம்பழங்களை கிலோ கணக்கில் வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து மாம்பழ வியாபாரிகள் கூறும்போது, ‘‘10 நாட்களுக்கு முன்பு மாம்பழ சீசன் தொடங்கியது. தற்போது 20 கடைகள் உள்ளன. மாம்பழ வரத்து அதிகரிக்கும் போது 50-க்கும் மேற்பட்ட கடைகள் வரும். மாம்பழங்கள் ஒரு கிலோ செந்தூரா ரூ.40 முதல் 60, அல்போன்சா ரூ.100 முதல் 120, சேலம் பெங்களூரா ரூ.130, பங்கனப்பள்ளி ரூ.60 முதல் 80 வரை விற்பனையாகிறது. இயற்கை மாற்றம், வறட்சியால் விளைச்சல் பாதித்துள்ளது. இதன் காரணமாக விலை உயர்ந்துள்ளது. மாம்பழ சீசன் உச்சத்தில் இருக்கும் போது விலை குறையும்,’’ என்றனர்.

சுவை மிகுந்த மல்கோவா உள்ளிட்ட ரகங்கள் நல்ல திரட்சியுடன் இன்னும் 2 வாரங்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிருஷ்ணகிரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பையூர் அருகே சாலையோரம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மாம்பழங்கள்.

ஏற்றுமதி ஆர்டர் இல்லை

தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் கூறும் போது, ‘‘வறட்சியால் இந்த ஆண்டு 70 சதவீதம் மா விளைச்சல் குறைந்துள்ளது. மாம்பழ ஏற்றுமதி ஆர்டர்கள் இதுவரை வரவில்லை. மாங்கூழ் தொழிற்சாலைகளும் இன்னும் அரவையைத் தொடங்கவில்லை. மக்களிடையே மாம்பழ நுகர்வு குறைந்துள்ளதால், விற்பனை மந்தமாக உள்ளது,’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in