

மதுரை நகரில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை, கவனத்தை திசைதிருப்பி பெண்களிடம் நகை பறித்தல், போலீஸ் போல் நடித்து நூதன நகை பறிப்பு போன்ற குற்றச் சம்பவங்கள் தினமும் நடக்கின்றன. இதனால் பெண்கள் தனியாக வசிக்கவும், கடைக்கு செல்லவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர்வாசிகள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்ல தயங்குகின்றனர்.
நகரில் குற்றங்களை தடுக்க, காவல் துணை ஆணையர் ஜெயந்தி தலைமையில் 4 உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் அடங்கிய 500-க்கும் மேற்பட்ட குற்றப்பிரிவு போலீஸார் பணிபுரிகின்றனர். ஆனாலும், தினமும் வழிப்பறி, திருட்டு போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்கிறது. போலீஸ் ரோந்தில் தொய்வு, அதிகம் இல்லாத குற்றப்பிரிவு போலீஸ், பழைய குற்றவாளிகளின் கண்காணிப்பில் தொய்வு போன்ற சில காரணங்களால் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நகரில் காவல்நிலைய எல்லை விரிவடைவதற்கு ஏற்ப போலீஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படாததால் குற்றச் செயல்புரிவோரை பிடிக்க முடியாமல் திணறுகின்றனர். ஒரு காவல் நிலைய குற்றப்பிரிவில் 20 பேர் தேவை. தற்போது 6 முதல் 10 பேருக்கும் குறைவாக உள்ளனர். அதிலும் சிலர் மாற்றுப் பணியில் செல்கின்றனர். ரோந்து போலீஸார் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கொலை, கொலை முயற்சி, அடிதடியில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் வெளியே இருக்கும் குற்றவாளிகள் கண்காணிப்பில் தொய்வு உள்ளது. இவர்களே அதிகம் திருட்டு, வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். கொடூர குற்றம், அடிக்கடி கைவரிசை காட்டுவோர் பிடிபட்டு சிறைக்கு செல்லும்போது, அவர்களை ஓராண்டுக்கு வெளிவர முடியாதபடி குண்டர் சட்டத்தை சரியாக பின்பற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சம்பட்டிபுரம், புதூர், அண்ணாநகர், கீரைத்துறை போன்ற பகுதிகளில் சட்டம், ஒழுங்கு குற்றவாளிகள் அதிகம் உள்ளனர். இவர்களுக்கு யாரும் வேலை கொடுப்பதில்லை என்பதால் வழக்கு, வாய்தா செலவுக்கு கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். இவர்களை கட்டுக்குள் வைக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். நகருக்குள் நுழையும் அனைத்து சாலைகளிலும் சோதனைச் சாவடிகளை அதிகப்படுத்த வேண்டும். நடைமுறையில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீஸ் எண்ணிக்கையை உயர்த்தவேண்டும். போலீஸ் பற்றாக்குறையை தவிர்க்க, பட்டாலியன், ஆயுதப்படை போலீஸாரை ஈடுபடுத்தலாம். போலீஸ் கெடுபிடி, தீவிர ரோந்தால் மட்டும் வழிப்பறி, கொள்ளையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். கெடுபிடி, காவல்நிலைய ஆய்வாளர், அதற்கு மேலுள்ள அதிகாரிகள் நடவடிக்கையால் வெளியூர் குற்றவாளிகள் நகருக்குள் நுழைய தயங்கவேண்டும்.
திறமை வாய்ந்த அதிகாரிகள் காவல்துறையில் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு குற்றம் அதிகம் நடக்கும் பகுதிகளில் பணி அமர்த்தவேண்டும். அவர்களின் பணியை உற்சாகப்படுத்த வேண்டும் என்றார்.