Published : 03 Jan 2014 12:00 AM
Last Updated : 03 Jan 2014 12:00 AM

பத்து தொகுதிகள் லட்சியம்... எட்டுத் தொகுதிகள் நிச்சயம்: பாஜக கூட்டணியில் மதிமுக குறிவைக்கும் தொகுதிகள்

“நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுடன் ம.தி.மு.க. கூட்டணி வைத்து போட்டியிடும்” என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தங்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளையும் வேட்பாளர்களையும் தேர்வு செய்து வைத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பா.ஜ.கவுடன் வைகோ கூட்டணி அமைக்க இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பே ‘தி இந்து’ செய்தி வெளியிட்டிருந்தது. இப்போது, அந்தச் செய்தியை உறுதிப்படுத்தி இருக்கிறார் வைகோ. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் வைகோ, அந்த லட்சியத்தை அடைவதற்காக பா.ஜ.கவுடன் கைகோர்க்கும் முடிவுக்கு வந்திருக்கிறார். இதனால், தன் மீது காவிச் சாயம் பூசப்படும் என்பதைக் கூட சமரசம் செய்து கொண்டிருக்கிறார் வைகோ.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய ம.தி.மு.க. பிரமுகர்கள் சிலர், “கூட்டணிகள் மாறினாலும் கடந்த 15 ஆண்டுகளாக பா.ஜ.கவின் தேசிய தலைவர்களோடு நல்லு றவில் இருக்கிறார் வைகோ. இலங்கை தமிழர் பிரச்சினையில் பா.ஜ.கவின் நிலைப்பாடு வைகோவை அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க உந்துசக்தியாக அமைந்துவிட்டது.

கூட்டணிக்கு வர விஜயகாந்த் வைக்கும் டிமாண்ட்

பா.ஜ.கவுக்கும் ம.தி.மு.க-வுக்கும் உறவுப் பாலம் போட்டுக் கொடுத்ததில் தமிழருவிமணியனுக்கு முக்கியப் பங்குண்டு. ம.தி.மு.க-வோடு மட்டுமல்ல. பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளையும் பா.ஜ.க அணிக்கு கொண்டுவர அவர் தொடர் முயற்சியில் இருக்கிறார். அநேகமாக அடுத்த அறிவிப்பு பா.ம.க-விடமிருந்து வரலாம். விஜயகாந்தை பொருத்தவரை, பா.ஜ.க. கூட்டணிக்கு கிட்டத்தட்ட ஓகே தான்.

ஆனால், ‘நாங்கள் எதிர்க் கட்சி அந்தஸ்தில் இருப்பதால் ம.தி.மு.க., பா.ம.க-வை விட கூடுதல் ஸீட்கள் எங்களுக்கு வேண்டும். அந்த கௌரவம் எங்களுக்கு முக்கியம்’ என்று கோரிக்கை வைக்கிறார். அதனால் தான் இன்னும் அவர்களுடனான பேச்சுவார்த்தை இறுதி வடிவத்தை எட்டாமல் இருக்கிறது’’ என்கிறது ம.தி.மு.க. வட்டாரம்.

ம.தி.மு.க. குறிவைக்கும் தொகுதிகளும் எண்ணிக்கையும்

“பா.ஜ.க கூட்டணியில் ம.தி.மு.க. எத்தனை தொகுதிகளுக்கு அடிபோடுகிறது?’’ என்று ம.தி.மு.க. மேல்மட்டத்தில் விசாரித்த போது, “பத்து லட்சியம்; ஏழு நிச்சயம். இது தான் வைகோவின் நிலைப்பாடு. கட்சியின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களான கணேசமூர்த்தி எம்.பி., சிவகங்கை புலவர் செவந்தியப்பன், பொருளாளர் மாசிலாமணி ஆகியோரைக் கொண்ட சிறப்புக் குழு தமிழகத்தில் ம.தி.மு.க-வுக்கு செல்வாக்குள்ள பத்துத் தொகுதிகளை அடையாளம் கண்டு வைகோவிடம் முதல்கட்ட அறிக்கையை கொடுத்திருக்கிறது.

அதன்படி விருதுநகர், தூத்துக்குடி, பொள்ளாச்சி, ஈரோடு, திருச்சி, காஞ்சிபுரம், ஆரணி ஆகிய ஏழு தொகுதிகளில் ம.தி.மு.க. போட்டி யிடும் வாய்ப்பு இருக்கிறது. இதுதவிர இன்னும் மூன்று தொகுதிகள் முடிவு செய்யப்படாமல் இருக்கிறது. முடிவு செய்யப்பட்ட ஏழு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்களையும் வைகோ கிட்டத்தட்ட முடிவுசெய்து வைத்துவிட்டார்.

விருதுநகரில் வைகோ, தூத்துக்குடியில் மாவட்டச் செயலாளர் ஜோயல், பொள்ளாச்சியில் மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன், ஈரோட்டில் ஆட்சிமன்ற குழு உறுப்பினரும் மாவட்டச் செயலாளருமான கணேச மூர்த்தி எம்.பி., காஞ்சிபுரத்தில் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, திருச்சியில் டாக்டர் திருமதி ரொக்கையா இவர்கள் தான் அந்த ஏழு வேட்பாளர்கள். இருந்தாலும், கடைசி நேரத்து முடிவு, கூட்டணி தர்மம் இவைகளால் ம.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளிலும் வேட்பாளர் பட்டியலிலும் சிறு மாற்றம் இருக்கலாம்’’ என்று அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x