

பி.ஆர்.பி. கிரானைட் குவாரிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை சரியே என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கீழவளவு பகுதியில் அரசு நிலங்களில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மதுரை மாவட்டம் முழுவதும் 175 கிரானைட் குவாரிகளில் மாவட்ட நிர்வாகம் சோதனை நடத்தியது.
இதில் 78 குவாரிகளில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தது. இவற்றில் 20 குவாரிகள் பி.ஆர்.பி. நிறுவனத்துக்குச் சொந்தமானவை. இதை தொடர்ந்து அந்த நிறுவனங்களின் கிரானைட் குவாரிகள், அலுவலகங்களுக்கு தமிழக அரசு சீல் வைத்தது. அனைத்து நிறுவனங்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ரூ.16,000 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தங்கள் நிறுவன குவாரிகளை திறக்க உத்தரவிடக் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பி.ஆர்.பி. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த தனி நீதிபதி, பி.ஆர்.பி. குவாரிகள் செயல்படவும் கிரானைட் ஏற்றுமதிக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற கிளையின் டிவிஷன் பெஞ்சில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை, பி.ஆர்.பி. கிரானைட் குவாரிகளுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் என்று தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து பி.ஆர்.பி. நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆஜராகி வாதாடினார்.
நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். கிரானைட் குவாரிகள் மூடப்பட்டிருப்பதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலங்களில் மீண்டும் கிரானைட் குவாரிகள் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்று ஹரிஷ் சால்வே வாதிட்டார்.
இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. பி.ஆர்.பி. நிறுவனத்தால் அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நிறுவன குவாரிகள் மீதான தடையை ரத்து செய்யக்கூடாது என்று நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு, பி.ஆர்.பி. நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் பி.ஆர்.பி. நிறுவனத்தின் 16 குவாரிகள் மூலம் தமிழக அரசுக்கு ரூ.4124.14 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நிறுவனம் சட்டவிரோதமாக பல்வேறு குவாரிகளை நடத்தியுள்ளது. அதன்படி ரூ.12,390.460 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அரசு நிலங்களில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக பி.ஆர்.பி. நிறுவனத்தின் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சுரங்க விதிகளுக்கு உள்பட்டு அந்த நிறுவனம் கிரானைட் கற்களை வெட்டி எடுக்க வில்லை என்றும் சாலைகள், கால்வாய்கள், நீர்நிலைகள் உள்ளிட்ட அரசு இடங்களை ஆக்கிரமித்துள்ளது என்றும் சுரங்கத் துறை இணை இயக்குநர், துணை இயக்குநர் ஆகியோர் அறிக்கை அளித்துள்ளனர்.
எனவே, பிஆர்பி நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.