வாழை மரம், இளநீர், மது பாட்டில்களுடன் வந்த விவசாயிகள்: டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு

வாழை மரம், இளநீர், மது பாட்டில்களுடன் வந்த விவசாயிகள்: டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு
Updated on
1 min read

சிங்காநல்லூர் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, வாழை மரம், இளநீர் மற்றும் மது பாட்டில்களுடன் விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.பி.இளங்கோவன், சிங்காநல்லூரைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஏராளமானோர், வாழை மரம், இளநீர் மற்றும் மது பாட்டில்களுடன், கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.

அவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: சிங்காநல்லூர் கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பில், தென்னை, வாழை, கரும்பு, மக்காச்சோளம், வெற்றிலை பயிரிடப்படுகிறது. தற்போது சிங்காநல்லூர்-வெள்ளலூர் சாலையில், வேலன் நகர் எதிரேயுள்ள குளத்தேரி சாலையில் புதிதாக மதுக்கடை திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்தப் பகுதி, விவசாய நிலங்கள் அதிகம் உள்ள பகுதியாகும். அங்கு மதுக்கடை திறந்தால், அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவர் என்று தெரிவித்திருந்தனர்.

விலங்குகளுக்கும் பாதிப்பு

காரமடை ஊராட்சி ஒன்றியம், கெம்மாரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மநாயக்கனூர் தோட்டம், முத்துக்கல்லூர், கெம்மாரம்பாளையம் பகுதி மக்கள் அளித்த மனுவில், “முத்துக்கல்லூரி-சீளியூர் சாலையில், கண்டிகருப்பராயன் கோயில் எதிரே புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கெனவே, வெள்ளியங்காடு, தோலம்பாளையம்புதூர் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளால் மக்கள் அவதிக்குள்ளாகி வரும் சூழலில், புதிய மதுக்கடை அமைப்பது சரியல்ல. அருகில் வனப்பகுதி இருப்பதால் சமூக விரோதிகள் ஊடுருவலும் அதிகமாகி, குற்றச் செயல்கள் அதிகரிக்கும். மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். விவசாயிகள் மட்டுமின்றி, வன விலங்குகளும் பாதிக்கப்பட்டு, விலங்கு-மனித மோதல்களும் உருவாகும்” என்று தெரிவித்துள்ளனர்.

குற்றங்கள் அதிகரிக்கும்

கோவை மாநகராட்சி 61-வது வார்டுக்கு உட்பட்ட ஒண்டிப்புதூர் பகுதி மக்கள் அளித்த மனுவில், “61-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்தப் பகுதியில் புதிதாக மதுக்கடை திறந்தால், அவ்வழியே செல்லும் பெண்கள், மாணவிகளுக்கு பெரிதும் இடையூறு ஏற்படும். இப்பகுதியில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி டாஸ்மாக் மதுக்கடை தொடங்கப்பட்டுள்ளது. எனவே, மக்களின் பாதுகாப்பு கருதி, இந்தக் கடையை மூட வேண்டும். புதிதாக மதுக்கடை தொடங்கவும் அனுமதிக்கக் கூடாது” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுல்தான்பேட்டை ஒன்றியம், சூலூர் வட்டம், கள்ளப்பாளையம் கிராம மக்கள் அளித்த மனுவில், “எங்கள் கிராமத்தில் செம்பாங்குட்டை அருகில் புதிதாக மதுக்கடை தொடங்க ஏற்பாடுகள் நடக்கின்றன. அருகிலேயே கோயில், விவசாய நிலங்கள், தொழிற்சாலை உள்ளதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே, மதுக்கடை திறப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in