

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து சட்டப்பேரவை செயலாளர் கே.பூபதியுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆலோசனை நடத்தினார்.
நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடக் கிறது. இத்தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் போட்டியிடு கிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மக்களவைத் தலைவர் மீராகுமார் நிறுத்தப்பட்டுள்ளார். போட்டி ஏற்பட்டுள்ளதால் வாக்குப் பதிவு நடத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
வேட்புமனு தாக்கல் தொடங்கி யுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவுக் கான ஏற்பாடுகள் நடந்து வரு கின்றன.
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பார்வை யாளராக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செயல்படுகிறார். தேர்தல் நடத்தும் அலுவலர்களாக சட்டப்பேரவை செயலாளர் கே.பூபதியும், இணை செயலாளர் பாலசுப்பிரமணியனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பேரவை கூட்டத் தொடர் நடப்பதால் அதிகாரிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ரம்ஜானையொட்டி கடந்த 3 நாட்களாக பேரவைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று பேரவைக் கூட்டம் இல்லை என்பதால் குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்துவது தொடர்பாக பேரவைச் செயலாளர் கே.பூபதியுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆலோ சனை நடத்தினார். தொடர்ந்து, வாக்குப்பதிவுக்கான ஏற்பாடு களையும் ஆய்வு செய்தார்.
குழுக்கள் கூட்ட அரங்கில்...
குடியரசுத் தலைவர் தேர்தலுக் கான வாக்குப்பதிவு பேரவைத் தலைவர் அறைக்கு அருகில் உள்ள குழுக்கள் கூட்ட அரங்கில் நடக்க உள்ளது. தமிழகத்தில் உள்ள எம்எல்ஏ.க்கள் அனைவரும் இங்கேயே வாக்களிப்பர். எம்.பி.க்களை பொறுத்தவரை இங்கேயும் வாக்களிக்கலாம். நாடாளுமன்றத்திலும் வாக்களிக் கலாம். எங்கு வாக்களிப்பது என்பது முன்கூட்டியே தெரிவித்து அதற்கான அனுமதியைப் பெற்று வாக்களிப்பார்கள்.
வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டி சீலிடப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் விமானத் தில் டெல்லிக்கு கொண்டு செல்லப்படும்.