

சென்னை நங்கநல்லூரில் உள்ள அஞ்சல் பெட்டியில் நேற்று முன்தினம் 23 பாஸ்போர்ட்டுகள் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை நங்கநல்லூர் 48-வது தெருவில் அஞ்சல் பெட்டி ஒன்று உள்ளது. இந்தப் பெட்டியில் இருந்து தினசரி மதியம் கடிதங்களை எடுப்பது வழக்கம். அந்த வகையில், நேற்று முன்தினம் மதியம் அஞ்சல் பெட்டியை திறந்தபோது அதற்குள் 23 பாஸ்போர்ட்டுகள் இருந்ததை கண்டு அஞ்சலர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவை போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டன.
இதுபற்றி மெர்வின் அலெக்சாண்டர் ‘தி இந்து’விடம் கூறும்போது, “நங்கநல்லூர் 48-வது தெருவில் உள்ள அஞ்சல் பெட்டியில் கடந்த 2-ம் தேதி மதியம் 23 பாஸ்போர்ட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அதில், சுருதி என்னும் பெண்ணுடைய அமெரிக்க பாஸ்போர்ட்டும் அடக்கமாகும். அவற்றை பழவந்தாங்கல் காவல்துறை வசம் ஒப்படைத்துள்ளோம்’ என்றார்.
இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘நங்கநல்லூர் அஞ்சல் பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட பாஸ்போர்ட்டுகள் அனைத்தும் பயன்படுத்தும் நிலையில் உள்ளன. எனவே, அவற்றில் உள்ள முகவரிகளை வைத்து சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு பாஸ்போர்ட் எப்போது, எங்கே தொலைந்தது என்ற தகவல்களை கேட்டுப் பெற்று வருகிறோம். பர்ஸ் திருடர்கள் யாராவது இந்த பாஸ்போர்ட்டுகளை கொண்டு வந்து அஞ்சல் பெட்டியில் போட்டுவிட்டு சென்றனரா என்கிற ரீதியிலும் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.
23 பாஸ்போர்ட்டுகள் ஒரே அஞ்சல் பெட்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நங்கநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.