மிருதங்கம் வாசிப்பதில் தடம் பதிக்கும் ஆட்டிசம் பாதித்த இளைஞர்

மிருதங்கம் வாசிப்பதில் தடம் பதிக்கும் ஆட்டிசம் பாதித்த இளைஞர்
Updated on
2 min read

உடலில் குறை இருந்தாலும் உள்ளத்தில் குறையில்லாமல் கர்நாடகசங்கீத கீர்த்தனைகளைப் பாடுவதிலும், தாளம் தப்பாமல் மிருதங்கம் வாசிப்பதிலும் தடம் பதித்து வருகிறார் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட விருதுநகர் இளைஞர் கவுதமன்.

விருதுநகர் என்.ஜி.ஓ.காலனி நேரு தெருவைச் சேர்ந்த சுந்தர்ராஜன் - கீதா தம்பதியின் ஒரே மகன் கவுதமன். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட இவருக்கு 33 வயதானாலும் 5 வயதுக்கு உரிய மன வளர்ச்சியே உள்ளது. பற்கள் இல்லாததால் தெளிவாகப் பேச முடியாது. இருப்பினும் கர்நாடக சங்கீத கீர்த்தனைகளைப் பாடுவதிலும், மிருதங்கம் வாசிப்பதிலும் மற்றவர்கள் ஈடுகொடுக்க முடியாத அளவுக்கு சாதித்து வருகிறார் கவுதமன்.

சுந்தர்ராஜன் - கீதா தம்பதியினர் தஞ்சையில் இருந்தபோது கவுதமனுக்கு உள்ள இசைஆர்வத்தை அறிந்து மிருதங்கவித்வான் டி.கே.ராமச்சந்திரனிடம் அழைத்துச் சென்றுள்ளனர். தொடக்கத்தில் வித்வான் ராமச்சந்திரன் சற்று யோசித்துள்ளார். கவுதமனுக்கு உள்ள இசை ஆர்வத்தைப் பார்த்து பயிற்சி அளித்துள்ளார். 8 ஆண்டுகள் சிறப்பாகப் பயிற்சியை முடித்து அரங்கேற்றமும் நடத்தப்பட்டது. அப்போது அவருக்குக் கிடைத்த பாராட்டுகள் ஏராளம்.

தினமும் காலை, மாலை தொடர் இசை பயிற்சி மேற்கொள்ளும் கவுதமன் தற்போது கர்நாடக சங்கீதத்தில் 150-க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளையும், பாரதியார், பாரதிதாசன் மற்றும் திரையிசைப் பாடல்களைப் பாடுவதோடு, அதற்கு ஏற்ற வகையில் தாளம் தப்பாமல் மிருதங்கம் வாசிப்பதிலும் தடம் பதித்து வருகிறார்.

உடல் திறன் குன்றியவர்களுக் கான நிகழ்ச்சி டெல்லியில் 2001-ல்நடைபெற்றது. அப்போது மிருதங்கம் வாசித்து, அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸின் பாராட்டைப் பெற்றார். திருவையாறு நாராயண கீர்த்தர் விழா, தஞ்சாவூர் சங்கீதஆஞ்சநேயர் கோயில் ஆடி அமாவாசை விழா, அரசு விழாக்கள், தனியார் நிகழ்ச்சிகளிலும் மேடையேறி கீர்த்தனைகள் பாடி காண்

போரை ஆச்சர்யப்படுத்தி ஏராளமான பாராட்டுக்களைப் பெற்றவர் கவுதமன். தற்போது இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்காத ஏக்கமும் அவருக்கு உண்டு.

இதுகுறித்து கவுதமனின் பெற்றோர் கூறியதாவது: ஐந்து தலைமுறைகளாக நெருங்கிய உறவில் திருமணம் செய்துகொண்டதால் கவுதமனுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது இந்த அளவுக்கு சிகிச்சை முறை இல்லை. 5 வயது வரை கவுதமன் அழுதால் அவன் அழுகையை நிறுத்தவே முடியாது. படுத்தவாறு தொடர்ந்து அழுதுகொண்டே இருப்பான். அவன் அழுகையை நிறுத்துவதற்காக ரேடியோவில் பாடலைப் போட்டு அருகில் வைப்போம். குறிப்பாக கர்நாடக சங்கீதம் பாடும்போது கவுதமன் அழுகையை நிறுத்திவிடுவான். அத்துடன் இசைக்கு ஏற்றவாறு கால்களையும் ஆட்டுவான்.

அதில் இருந்து அவனது இசை ஆர்வம் அதிகரித்தது. வீட்டில் இருந்த டப்பா, பாத்திரங்களை அடுக்கி வைத்து குச்சியை வைத்துத் தட்டி இசைப்பதைத் தொடர்ந்து செய்து வந்தான். அவனது இசை ஆர்வத்தை அறிந்து 8 வயதில் மிருதங்கப் பயிற்சியில் சேர்த்தோம். இன்று இசைதான் அவனது மூச்சாக உள்ளது.

ஆனால், கவுதமனுக்கு உரியஅங்கீகாரமோ, ஊக்கமோ இதுவரை இல்லை. அரசு விழாக்கள், பள்ளி நிகழ்ச்சிகளில் கவுதமனை மேடையேற்ற வாய்ப்புக் கொடுத்தால் இசை ஆர்வம் மேலும் உயிர் கொடுக்கும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in