

போக்குவரத்துக் கழக ஊழியர் களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல ஓடின.
15, 16 தேதிகளில் தொழி லாளர்கள் போராட்டம் தீவிரமடைந் தது. தமிழகம் முழுவதும் பெரும் பாலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் வெளியூருக்கு செல்ல முடியாமலும் பணிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். தனியார் பேருந்துகள், பள்ளி, கல்லூரி பேருந்துகளை பயணி களின் வசதிக்காக அரசு இயக்கியது.
இந்நிலையில், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகி யோர் தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘ஊழியர்கள் இன்று (நேற்று) அதிகாலை முதல் பணிக்குத் திரும்பினர். இதனால், தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் 2 நாட்களில் சுமார் ரூ.30 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றார்.