

எய்ம்ஸ் மருத்துவமனை அமை விடம் தொடர்பாக முதல்வர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சரு, பெருந்துறை எம்எல்ஏ-வுமான தோப்பு என்.டி.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
தமிழகம், பஞ்சாப், அஸ்ஸாம், ஹிமாசல பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் ஆகிய ஐந்து மாநிலங்களில் அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி மைய மருத்துவமனை (எய்ம்ஸ்) அமைக்கப்படும் என கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஈரோடு மாவட்டம் பெருந்துறை, புதுக்கோட்டை, மதுரை தோப்பூர், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ஆகிய ஐந்து இடங்களில் இடம் வழங்க தயார் என மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. அதி நவீன வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனையை எங்கு அமைப்பது என்பது தொடர்பாக மத்திய குழுவினர் ஆய்வு நடத்தினர்.
இக்குழுவினர் முதலில் பெருந்துறையிலும், அடுத்ததாக மதுரை உள்ளிட்ட நான்கு இடங் களிலும் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் மருத்துவமனை அமைய இடவசதி, உட்கட்டமைப்பு வசதிகள், குடிநீர், சாலை வசதி, எத்தனை மாவட்ட மக்கள் பயன் பெறுவார்கள், எந்தெந்த நோய் களின் தாக்கம் உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கணக்கிடப்பட்டன. இந்த அறிக்கை மத்திய அரசிடமும் கடந்த 2015-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதமரைச் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தஞ்சாவூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என மனு அளித்துள்ளார். முதல்வரின் இந்த மனு மேற்கு மண்டலத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து வசதி களையும் உள்ளடக்கிய பெருந் துறையை விட்டுவிட்டு, தஞ்சா வூருக்கு முக்கியத்துவம் கொடுத்து முதல்வர் மனு அளிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்ற கேள்வியை கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி எழுப்பியுள்ளது.
இதேபோல் பல்வேறு அமைப்பு கள், கட்சிகளைச் சார்ந்தோர் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். கோவை, ஈரோடு, சேலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் தலை யிட்டால் எய்ம்ஸ் மருத்துவ மனை இடமாற்றம் செய்யப்பட்டுள் ளது என்ற குற்றச்சாட்டும் சமூக வலைத்தளங்களில் எழுப்பப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளரும், தனியார் மருத்துவமனைகள் கூட்டமைப்பின் மாநில செயலாளருமான சி.என்.ராஜாவிடம் பேசியபோது, பெருந்துறையில் போக்குவரத்து துறையின் கீழ் இயக்கும் ஐஆர்டிடி மருத்துவ கல்லூரி 600 படுக்கை வசதிகள் கொண்டதாக உள்ளது. போதுமான இடவசதி, கட்டிட வசதி, காற்றோட்டம், குடிநீர் வசதி இங்கு உள்ளது. இங்கு எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பது மிக எளிதானது.
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் வரையிலான மாவட்ட மக்கள் எளிதில் பெருந்துறைக்கு வந்து செல்ல முடியும். அதோடு, கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களும் சில மணி நேரத்தில் மருத்துவ சிகிச்சைக்கு வர முடியும். நான்கு வழிச்சாலை, ரயில்வே, பேருந்து வசதிகளும் இங்கு உள்ளது. ஒரு மணி நேரத்தில் விமான நிலையம் சென்றடைய முடியும் என்பதால் மெடிக்கல் டூரிசம் வளரும். மருத்துவ மேற்படிப்பு, ஆய்வுப்பணிகளும் வளரும்’ என்றார்.
தனியார் மருத்துவமனைகளின் தலையீட்டால் இடமாற்றம் என்ற குற்றச்சாட்டு குறித்து பேசியபோது, இந்த கருத்தில் எனக்கு உடன் பாடு இல்லை. அப்படியே அவர்களுக்கு ஒரு எண்ணம் இருந் தாலும், அதை மத்திய அரசு எப்படி ஏற்றுக்கொள்ளும்? கோவையில் 3 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. பெரிய மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. அப்படி இருக்கையில் தனியார் மருத்துவமனைகளின் மீது குற்றம் சாட்டுவது தவறானது’ என்றார்.
ஈரோடு அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சிவநேசனிடம் பேசியபோது, மேற்கு மாவட்டங்கள் தொழில் மண்டலங்களாக விளங்கி வருகின்றன. இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் மருத்துவ தேவைகளை நிறை வேற்ற பெருந்துறையில் எம்ய்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும். இதற்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் பெருந்துறையில் உள்ளன. ஐஆர்டிடி மருத்துவமனை அருகே உள்ள இடவசதி தவிர, சிப்காட் பகுதியில் அரசுக்கு சொந்தமான 6000 ஏக்கர் நிலம் உள்ளது. எதிர்கால விரிவாக்கத்திற்கு இந்த இடத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம், என்றார்.
பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் சுற்றுச் சூழல்துறை அமைச்சருமான தோப்பு என்.டி.வெங்கடாச லத்திடம் பேசியபோது, ‘எய்ம்ஸ் மருத்துவமனை அமைய பெருந் துறை பொருத்தமான இடமாகும். நிலம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் இங்கு தயாராக உள்ளன. திருப்பூர் மற்றும் சிப்காட்டில் பணியாற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மருத்துவ சிகிச்சை பெற இந்த மருத்துவமனை உதவும்.
ஜெயலலிதாவிற்கு பிடித்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும். முதல்வர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்துவேன்’ என்றார்.