

உடற்பயிற்சி செய்தால் உணவுக்குழாய் புற்றுநோய் உள்ளிட்ட எவ்விதமான நோயும் வராது என ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் சந்திரமோகன் தெரிவித்தார்.
கனடாவில் நடந்த சர்வதேச மாநாட்டில், சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை பட்டமேற்படிப்பு மாணவர்கள் 6 பேர் 14 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். இந்த ஆய்வுக் கட்டுரைகளில் முக்கியமாக பழைய சாதத்துடன் ஊறுகாய், கருவாடு, உப்புக் கண்டம் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் உணவுக்குழாய் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளது என்ற ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்துள்ளனர்.
இதுதொடர்பாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சை துறை தலைவர் டாக்டர் சந்திரமோகன் கூறியதாவது:
என்னுடைய தலைமையில் சென்றுதான் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தோம். உணவில் உப்பை அதிகம் சேர்த்துக் கொள்ளக்கூடாது. எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி செய்யும் உணவுகளை சாப்பிடக்கூடாது. நெருப்பில் நேரடியாக இறைச்சியை சுட்டு சாப்பிடக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனை பின்பற்றித்தான் ஆய்வு நடத்தினோம்.
அந்த காலத்தில் பழைய சாதத்துடன் கருவாடு, ஊறுகாய் போன்றவற்றை சாப்பிட்ட மக்கள் 90, 100 வயது வரை வாழ்ந்துள்ளனர். அதற்கு முக்கிய காரணம், அவர்களிடம் உடல் உழைப்பு அந்த அளவுக்கு இருந்தது. அதனால் அவர்களுக்கு உடலில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்த காலத்தில் மக்களிடம் உடல் உழைப்பு இல்லை. சரியான உடற்பயிற்சியும் செய்வதில்லை. கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை பார்ப்பது, சாப்பிடுவது, தூங்குவதுமாக இருக்கின்றனர். இதனால் பல்வேறு நோய்கள் வருகிறது. முக்கியமாக உடல் பருமன் நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். உடற்பயிற்சி செய்தால் உணவுக்குழாய் புற்றுநோய் உள்ளிட்ட எவ்விதமான நோயும் வராது. ஆரோக்கியமான உடலுக்கும், வாழ்விற்கும் உடற்பயிற்சி மிகவும் முக்கியம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.