

உடுமலையில் ‘தி இந்து’ செய்தி எதிரொலியாக பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி முள்புதராகக் கிடந்த காலியிடத்தை சுத்தம் செய்து இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடமாக மாற்ற நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
உடுமலை நகராட்சிக்குட்பட்ட கச்சேரி வீதியில் நீதிமன்றங்கள், சார்பதிவு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதே சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நகராட்சிக்கு சொந்தமான காலியிடம் உள்ளது. பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாததால் முள் புதர் மண்டிய இடமாகவும், சமூக விரோதிகளின் புகலிடமாகவும் மாறியது.
இந்த இடத்தை சுத்தம் செய்து இரு சக்கர வாகன நிறுத்துமிடமாக மாற்றினால், போக்குவரத்து சிக்கலுக்குத் தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பதாக ‘தி இந்து’வில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நகராட்சியால் அந்த இடத்தை பொக்லைன் இயந்திரம் மூலமாக சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
நகராட்சி ஆணையர் கே.சரவணக்குமார் கூறும்போது, ‘பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நகராட்சிக்குச் சொந்தமான காலியிடத்தை இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.
இக்காலியிடத்தை யொட்டி தபால் நிலையம் உள்ளது. தபால் நிலையத்துக்குச் சொந்தமான சில மூட்டைகளும் அப்பகுதியில் வீசி எறியப்பட்டுள்ளன. அவை காலாவதியான தபால்களா? அல்லது முக்கிய ஆவணங்கள் உள்ளதா? என்பது குறித்த விவரம் தெரியவில்லை.