

அந்தமான் நிகோபார் பகுதியில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மண்டல இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் கூறும்போது, “வடகிழக்கு அந்தமான் நிகோபார் பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளது. எனவே அந்தமான் நிகோபார் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவாகி வடமேற்கு திசை நோக்கி நகரக்கூடும். இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை'' என்றார்.
வங்கக் கடலில் ஆந்திர மாநிலம் அருகே காற்றழுத்த சுழற்சி உருவாகி இருக்கிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் முடிந்த மழை நிலவரப்படி தருமபுரி மாவட்டம் மாரந்தஹள்ளி 8 செ.மீ., திருநெல் வேலி மாவட்டம் பாபநாசம் பகுதியில் 7 செ.மீ., நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 6 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாற்றில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் நேற்று காலையில் வெயில் அதிகமாக இருந்தது. பிற்பகல் 12 மணியளவில் கருமேகம் திரண்டு நகரின் சில பகுதிகளில் மழை பெய்தது. சாந்தோம் நெடுஞ்சாலையில் பலத்த காற்று வீசியதால் மரம் விழுந்தது. பெரம்பூர், புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.