

ஓசூர் அருகே உள்ள மத்திகிரி 43-வது வார்டில் மின்வாரியம் மூலமாக மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கு நீண்ட காலமாக குறைந்த அழுத்தமுள்ள மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இதனால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் மின் விளக்குகள் எரியும், ஆனால் வெளிச்சம் இருக்காது என்ற நிலை இருந்தது. மேலும் குறைந்த அழுத்தமுள்ள மின்சாரம் விநியோகம் செய்வதினால் வீடுகளில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். ஆகவே உயர் மின் அழுத்தமுள்ள மின்சாரம் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கையை மின்வாரியத்துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் ‘தி இந்து’ வாசகர் பி.ஜி.மூர்த்தி கோரிக்கை வைத்திருந்தார். இதுகுறித்த செய்தி கடந்த மாதம் 6-ம் தேதி ‘தி இந்து’ நாளிதழில் வெளியானது.
இதைத் தொடர்ந்து மின் வாரியம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, 43-வது வார்டில் உயர் மின் அழுத்தம் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டு, மத்தி கிரியில் சீரான மின் விநியோகம் தொடங்கி உள்ளதால் பொதுமக்களின் நீண்ட நாள் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து மத்திகிரியில் வசிக்கும் பி.ஜி.மூர்த்தி கூறியதாவது, ஓசூர் நகராட்சி 43-வது வார்டில் உள்ள மத்திகிரி முழுவதும் குறைந்த அழுத்தமுள்ள மின்சாரம் (சிங்கிள்பேஸ்) வழங்கப்பட்டு வந்தது. இதனால் உயர் மின் அழுத்தமுள்ள மின்சாரம் வழங்க புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என கடந்த 2014-ம் ஆண்டு முதல் கோரிக்கை வைத்தோம்.
இதுகுறித்த செய்தி வெளியான பிறகு, 43-வது வார்டில் உள்ள நேதாஜி நகரில் உயர் மின் அழுத்தம் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு சீரான மின் விநியோகம் தொடங்கி உள்ளது. இதனால் மத்திகிரி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், என்றார்.