

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை எழுப்பிய விவகாரத்தில் பாமக, திமுகவினர் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர். இதனால், தமிழக-ஆந்திர எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் உற்பத்தியாகி ஆந்திரம் மற்றும் தமிழ்நாடு வழியாக ஓடும் பாலாறு 348 கி.மீ தொலைவு பயணித்து காஞ்சிபுரம் மாவட்டம் வயலூரில் வங்கக் கடலில் கலக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 222 கி.மீ தொலைவு பாலாறு பயணிக்கிறது. பாலாற்றின் மூலம் தமிழ்நாட்டில் 4.20 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இவற்றில் 33 கி.மீ தொலைவு பயணிக்கும் ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே 28 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், மழைக்காலங்களில் பாலாற்றுக்கு கிடைக்கும் தண்ணீர் ஆந்திர மாநிலத்தில் பெரும்பகுதி தடுத்து நிறுத்தப்படுகிறது. எனவே, ஆந்திர அரசு கட்டியுள்ள தடுப்பணைகளை அகற்றவேண்டும் என தமிழக விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், தமிழக-ஆந்திர எல்லையில் புல்லூரில் உள்ள தடுப்பணையின் உயரத்தை 5 அடியில் இருந்து 12 அடியாக ஆந்திர நீர்ப்பாசனத் துறையினர் திடீரென உயர்த்திக் கட்டியுள்ளனர். மேலும், தடுப்பணைக்கு கீழே பேபி அணை கட்டும் பணியும் நடக்கிறது. இதனால், பாலாற்றுக்கு வரும் தண்ணீரை முற்றிலும் தடுக்க ஆந்திர அரசு முயற்சி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தடுப்பணையின் கரையில் தமிழர்களால் பராமரிக்கப்படும் கனகநாச்சியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகன நிறுத்தும் இடத்துக்கான குத்தகை வசூலிக்கும் ஏலத்தையும் கக்குந்தி ஊராட்சி நிர்வாகத்தினர் சில தினங்களுக்கு முன்பு நடத்தினர்.
ஆந்திர அரசின் இந்த திடீர் நடவடிக்கையைக் கண்டித்து புல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், புல்லூர் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பாமக மூத்த நிர்வாகிகளான டி.கே.ராஜா, பொன்னுசாமி ஆகியோர் புல்லூரில் ஆந்திர அரசு கட்டிய தடுப்பணையை நேற்று பார்வையிட்டனர். பின்னர், ஆந்திர அரசைக் கண்டித்து கோஷமிட்டனர். அப்போது, ‘‘ஆந்திர அரசு உடனடியாக தடுப்பணையை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் பாமக சார்பில் தடுப்பணையை அகற்றப்படும்’’ என்றனர்.
தொடர்ந்து, திருப்பத்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ நல்லதம்பி மற்றும் நிர்வாகிகள் தடுப்பணையை பார்வையிட்டார். அப்போது, ‘‘ஆந்திர அரசின் நடவடிக்கையைக் கண்டித்து விரைவில் திமுக சார்பில் மாவட்ட அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத் தப்படும். இதுதொடர்பான பிரச் சினையை சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எழுப்புவேன்’’ என்றார்.
அவரைத் தொடர்ந்து, வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், பாஜக நிர்வாகி கள் பலர் தடுப்பணையை பார்வை யிட்டுச் சென்றனர். ஆந்திர அரசின் நடவடிக்கையைக் கண்டித்து விரைவில் மற்ற கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால், புல்லூர் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பாலாறு பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் ஏ.சி.வெங்க டேசன் கூறும்போது, ‘‘ஆந்திர அரசு சார்பில் புல்லூரில் தடுப் பணையின் உயரத்தை அதிகரித்து அங்கு படகுத் துறை ஏற்படுத்தி சுற்றுலாப் பயணிகளை கவரும் திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். தமிழர்களால் பராமரிக்கப்பட்ட கனகநாச்சியம்மன் கோயிலையும் கைப்பற்றி அதன் மூலம் கிடைக்கும் வருவாயை ஆந்திர மாநில கக்குந்தி கிராம ஊராட்சியின் வளர்ச்சிக்காக திட்டமிட்டுள்ளனர்.
இதன்மூலம், மைசூர்-சென்னை மாகாண ஒப்பந்தம் 1892-ஐ அப்பட்டமாக ஆந்திர அரசு மீறியுள்ளது. எனவே, பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு விதியை மீறி கட்டியுள்ள தடுப்பணைகளை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்யவேண்டும். புல்லூரைப் போலவே மற்ற தடுப்பணைகளின் உயரத்தையும் அதிகரித்துள்ளார்களா? என ஆய்வு செய்யவேண்டும்’’ என்றார்.