தமிழகத்தில் விற்பனையாகும் கேரள லாட்டரி டிக்கெட்டுகள்

தமிழகத்தில் விற்பனையாகும் கேரள லாட்டரி டிக்கெட்டுகள்
Updated on
1 min read

கேரள அரசின் லாட்டரி டிக்கெட்டுகள் தமிழகம் முழுவதும் சர்வ சுதந்திரமாக விற்கப்படுவதாக குற்றம் சாட்டுபவர்கள், ’’ தமிழக அரசே மீண்டும் லாட்டரி விற்பனையைத் தொடங்கிவிடலாம்’’ என்கிறார்கள். 2003-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி தமிழகத்தில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், லாட்டரியைத் தடை செய்ததன் நோக்கம் முழுமையடையவே இல்லை என்பதுதான் உண்மை.

தென் மாநிலங்களில் கேரளாவைத் தவிர மற்ற மாநிலங்களில் லாட்டரி தடை அமலில் உள்ளது. ஆனால், கேரளா அரசின் லாட்டரிகளில் 70 சதவீதம் வரை தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி, மஹாராஷ்டிரா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் கள்ளத் தனமாக விற்கப்படுகிறதாம். இதில் 40 சதவீத லாட்டரி விற்பனை தமிழகத்தில்தான் என்பது திகைக்க வைக்கும் செய்தி.

இது குறித்து ’தி இந்துவிடம் பேசிய குமுளியில் லாட்டரி வியாபாரம் செய்துவரும் சிலர், ’’லாட்டரிக்குத் தடை என்றதுமே தமிழக லாட்டரி முதலாளிகள் பலரும் பினாமிகள் பெயரில் கேரள லாட்டரி உலகில் கால்பதித்து விட்டார்கள். அவர்கள் மூலமாகத்தான் தமிழகத்துக்கும் லாட்டரி டிக்கெட்டுகள் கடத்தப்படுகின்றன.

முல்லைப் பெரியாறு பிரச்சினை உச்சத்தில் இருந்த நேரத்தில், லாட்டரி வருமானம் இருக்கும் தெம்பில் ’முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கு 100 கோடியை ஒதுக்கத் தயார்’ என்று சட்டமன்றத்திலேயே அறிவித்தார் மாநில நிதியமைச்சர் கே.என்.மாணி.

லாட்டரி மூலம் கேரளா பெறும் ஆண்டு வருமானம் சுமார் ரூ.1,000 கோடி. இதில் தமிழர்களின் பணம் சுமார் 400 கோடி. பகிரங்கமாக இல்லாமல் கள்ளத்தனமாக வியாபாரம் செய்தே இத்தனை கோடிகளுக்கு தமிழகத்தில் கேரள லாட்டரி விற்பனை ஆகிறது. இதற்கு பேசாமல், தமிழக அரசே மீண்டும் லாட்டரி வியாபாரத்தை தொடங்கிவிடலாம்.

டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு லாட்டரியைத் தொடங்கினால், டாஸ்மாக் மூலம் இப்போது வந்துகொண்டிருக்கும் வருவாயை இழப்பு இன்றி சரிசெய்யலாம்.

தமிழர்களின் பெருவாரியான பணம் கேரளாவின் கஜானாவுக்குப் போவதும் தடுக்கப்படும்’’ என்றும் யோசனை தெரிவித்தார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in