

கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த ஒருவரை பல்லாவரத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர். தப்பிய 2 பேரை தேடி வருகின்றனர்.
சென்னை பல்லாவரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு மளிகைக் கடைக்கு நேற்று காலையில் 3 பேர் வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் பாடி ஸ்பிரே வாங்கிக் கொண்டு ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அந்த ரூபாய் நோட்டின் மீது கடைக் காரருக்கு சந்தேகம் வரவே, வேறு ரூபாய் நோட்டை கேட்டாராம். அதற்கு அந்த நபர்கள் கிண்டலாக பேச, அவர்களைப் பிடிக்க முயன்றுள்ளார்.
இதில் 2 பேர் தப்பியோடிவிட்டனர்; ஒருவர் மட்டும் சிக்கினார். இதுகுறித்து பல்லாவரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து, அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அதில், பிடிபட்ட நபர் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரகுமான் (21) என்று தெரிந்தது. அவரிடமிருந்து மேலும் ஒரு ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை போலீஸார் பறிமுதல் செய்தனர். 3 பேரும் கடந்த 24-ம் தேதி மேற்கு வங்கத்தில் இருந்து சென்னைக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். அவர்கள் சென்னையில் பல இடங்களில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர். தப்பிச்சென்ற மற்ற 2 பேரையும் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.