

சிலைகள் கடத்தப்படுவதை தடுப்ப தற்காக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில் சிலைகளை யும் முறைப்படி ஆவணப்படுத்த அற நிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச சிலைக் கடத்தல் புள்ளியான சுபாஷ் சந்திர கபூரின் கூட்டாளிகளான தீனதயாள், சஞ்சீவி அசோகன், லெட்சுமி நரசிம்மன் உள்ளிட்டவர்களால் ஏராளமான கோயில் சிலைகள் தமிழகத்திலிருந்து வெளிநாடு களுக்குக் கடத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக கடத்தல் புள்ளி கள் மீது தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு (சி.ஐ.டி) போலீஸார் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி வருகிறார்கள். இந் நிலையில், சிலைக் கடத்தலைத் தடுப்பதற்காகவும், ஒருவேளை கடத்தப்பட்டால் அவை தமிழகத் துக்குச் சொந்தமானது என்பதை எளிதில் உறுதிப்படுத்தி மீட்க வசதி யாகவும் சிலைகளை முறைப்படி ஆவணப்படுத்தும் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை முடுக்கிவிட்டுள்ளது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டிலும் கூட்டுப் பொறுப்பி லும் சேர்த்து 38,481 திருக்கோயில் கள் உள்ளன. இதில் மடாலயங்கள் மற்றும் சமஸ்தானங்களுக்குச் சொந்தமான கோயில்களும் அடங்கும். அறநிலையத் துறை கோயில்களின் செப்புத் திருமேனி சிலைகளை ஆவணப்படுத்தும் பணிகள் 1980-க்கு முன்பு தொடங் கப்பட்டன. ஆனால், அப்போது சுமார் 25 ஆயிரம் செப்புத்திரு மேனிகள் மட்டுமே ஆவணப்படுத் தப்பட்டன. இந்நிலையில், சிலைக் கடத்தல் சம்பவங்கள் அதிகமாகி வருவதைத் தொடர்ந்து தற்போது, மீண்டும் சிலைகளை ஆவணப் படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறையின் துணை ஆணையர் ஒருவர் ‘தி இந்து’ விடம் பேசும்போது, “கோயில் களில் உலோக திருமேனிகள் மட்டுமல்லாது கற்சிலைகளும் கடத்தப்படுவதாக தகவல்கள் வரு வதால் தற்போது கற்சிலைகளை யும் சேர்த்தே ஆவணப்படுத்தச் சொல்லி இருக்கிறோம். இதன்படி, கோயில்களில் உள்ள அனைத்துச் சிலைகளின் நீளம், உயரம், அகலம், முடிந்தால் அதன் எடை இவற்றோடு நான்கு கோணங்களில் சிலைகளின் தெளிவான புகைப்படங்கள் ஆகிய வற்றை ஆன்லைனில் அதற்கென உள்ள படிவத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.
சம்பந்தப்பட்ட சிலை கருவறை யில் உள்ளதா, மகா மண்டபத் தில் உள்ளதா? அது எந்த மன்னர் காலத்துச் சிலை?, அது நூறாண் டுக்கு முந்தைய சிலையா? பிந்தைய சிலையா? அந்த சிலையின் வயது, அந்த சிலை பாரம்பரிய கலை மற்றும் புராதனச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம் 1973-ன் பிரகாரம் தொல்லியல் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? அப்படி பதிவு செய்யப்பட்டிருந்தால் அதற்கான பதிவெண் உள்ளிட்ட விவரங்களையும் படிவத்தில் இணைக்க வேண்டும்.
மேலும், சம்பந்தப்பட்ட கோயிலுக்கு ஸ்டீல் டோர், கிரில் டோர், எக்ஸ்ட்ரா லாக் உள்ளதா? சிலைகள் உள்ள பகுதிக்குள் செல்ல பயோ மெட்ரிக் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறதா? அலாரம், சி.சி.டி.வி கேமரா வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என்பன உள்ளிட்ட விவரங்களையும் கட்டா யம் அந்தந்த கோயில் நிர்வாகங் களே மிக விரைவில் பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.
பழமையான கோயில்களில் கருவறைக்குள் இருக்கும் சிலை களைப் படம்பிடிக்க யாரையும் அனுமதிப்பதில்லை. தற்போது, வஸ்திரம், பூ மாலைகள் எதுவும் இல்லாமல் சிலைகளை படமெடுத்து கட்டாயம் படிவத்தில் இணைக்க வேண்டும் என்று அறநிலையத் துறை அதிகாரிகள் வலியுறுத்து வதால், ‘இது ஆகம விதிகளுக்கு விரோதமானது. இதனால் கோயில் சிலைகளின் சக்தி குறைந்துவிடும்’ என்றும் ஒரு சாரார் சர்ச்சையைக் கிளப்புகிறார்கள்.