Published : 05 Apr 2017 10:05 AM
Last Updated : 05 Apr 2017 10:05 AM

2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பானை ஓடு: தமிழ் பிராமி எழுத்துக்களோடு விருத்தாசலம் அருகே தர்மநல்லூரில் கண்டுபிடிப்பு

விருத்தாசலம் தாலுகா தர்மநல்லூரில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பிராமி எழுத்து களுடன் கூடிய பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தர்மநல்லூரின் பெரியதோப்பு பகுதியானது 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்காலத்து மக்கள் வாழ்ந்த பண்பாட்டுப் பகுதி யாகும். இங்கு, தஞ்சை தமிழ் பல் கலைக்கழக பேராசிரியர் கா.ராஜன் தலைமையிலான குழுவினர் 1997-ல் கள ஆய்வு மேற்கொண்டபோது, இரும்பு காலத்தைச் சேர்ந்த முது மக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து வரலாற்று ஆய்வாளர்கள் ஜெ.ஆர்.சிவராம கிருஷ்ணன் (வரலாற்றுத் துறை உதவிப்பேராசிரியர், சேலம் ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி), சு.கண்ணன் (வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்) ஆகியோர் 2007-ல் இப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சிதைந்த முதுமக்கள் தாழிகள், கருப்பு - சிவப்பு வண் ணத்திலான மட்கல ஓடுகள், வழு வழுப்பான கருப்பு நிற மட்கல ஓடுகள், செங்காவி பூசப்பட்ட பானை ஓடுகள், ரோமானியர்கள் பயன்படுத்திய வெளிர் சாம்பல் நிறம் கொண்ட மட்கல ஓடுகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன.

2008-ல் இவர்கள் இங்கு நடத் திய இன்னொரு ஆய்வில் பெருங் கற்காலத்தைச் சேர்ந்த பானை ஓடுகள், தானியங்களை அரைக் கப் பயன்படுத்தும் திருகை இயந் திரத்தின் உடைந்த சுழலும் பகுதி, பழுப்பு நிற கல்மணிகள், சுடுமண் ணால் ஆன ஆண் உருவம் உள் ளிட்டவைகள் கண்டெடுக்கப் பட்டன. இத்துடன், பெரியதோப்பின் மேடான பகுதியில், பின் இடைக் காலத்தைச் சேர்ந்த சுடுமண் உறை கிணறுகள் நான்கும் கண்டுபிடிக்கப் பட்டன.

இந்த நிலையில் கடந்த வாரம் இந்தப் பகுதியிலிருந்து, 2000 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப் பட்ட பானை ஓடு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உதவிப் பேராசிரியர்கள் சிவராம கிருஷ்ணனும் கண்ணனும் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

’’பெரியமேடு பகுதியானது பண்டை தமிழர்களின் வரலாற்று தடயங்களைத் தனக்குள்ளே வைத் திருக்கும் அரிய பொக்கிஷமாகும். தற்போது, பொதுமக்களின் திறந்த வெளி கழிப்பிடமாக இருக்கும் இப்பகுதியிலிருந்து தர்மநல்லூர் மக்கள் தைப்பொங்கல் சமயத்தில் மண்ணை வெட்டி எடுத்து தங்க ளின் தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். அப்படி வெட்டும்போது தான், பெருங்கற்கால தமிழர்கள் பயன்படுத்திய பொருட்களின் சிதை வுகள் வெளியே வர ஆரம்பித்தன.

நாங்கள் அங்கே தீவிர ஆய்வு கள் மேற்கொண்ட பிறகு, மண் வெட்டுவதற்கு கோட்டாட்சியர் மூலமாக தடைபோட வைத்தோம். இந்தப் பகுதியில் ஏதாவது வித்தி யாசமான பொருட்கள் கிடைத்தால் எங்களுக்கு உடனடியாக தகவல் தரும்படி உள்ளூர் இளைஞர்கள் சிலரிடம் சொல்லி வைத்திருந்தோம். அப்படித்தான் கடந்த வாரம், குமார் என்ற இளைஞர் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடு ஒன்றை கண்டெடுத்து அதை எங்களுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

சிவராமகிருஷ்ணன், கண்ணன்

கருப்பு - சிவப்பு நிறத்தையுடைய அந்த மட்கலத்தில் 4 தமிழ் பிராமி எழுத்துகள் கீறப்பட்டுள்ளது. பிராமி எழுத்துகளைப் படிப்பதில் வல்லுந ரான தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜவேலுவிடம் மட்கலத்தை காட்டி னோம். அதிலுள்ள எழுத்துகளை ‘யமகன்’ என்று வாசித்த ராஜவேலு, ’ய - வுக்கு முன்னதாக வேறு எழுத்துகள் இருக்க வேண்டும். அதையும் சேர்த்துப் படித்தால்தான் நேரடியான அர்த்தம் தெரியும்’ என்று சொன்னார்.

’யமகன்’ என்பதற்கு கடைச்சன், கடைசி மகன், இளைய மகன் என தமிழ் அகராதிகள் பொருள் தருகின்றன. இந்த எழுத்துகளின் அமைப்பைப் பார்க்கும்போது இவை கி.மு. முதல் மற்றும் கி.பி. ஒன்றாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த எழுத்துகளாக இருக்கலாம் என அறிய முடிகிறது’’ என்றார்கள்.

ஏற்கெனவே, 2009-ல் தர்மநல்லூ ரில், பல்வேறு வண்ணங்கள் கொண்ட கல்மணிகள் கண்டெடுக் கப்பட்டன. கடலூர் மாவட்டத்தின் குடிகாடு பகுதியில் கல்மணிகள் தயாரிக்கும் தொழிற்சாலை இருந் ததும் கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பெருங்கற்கால தமிழர்களின் வாழ்க்கைத் தடயங் கள் கிடைத்துவரும் இப்பகுதியில் விரிவான தொல்லியல் அகழ்வுகள் நடத்தப்பட்டு பண்டைத் தமிழர் களின் வரலாறு முழுமையாக வெளிவருவதற்கு மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் தர்மநல் லூர் பொதுமக்கள்.

2000 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடு, சுடுமண்ணால் ஆன ஆண் உருவம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x