சிறுவாணி நீரை நம்பியிருக்கும் விவசாயிகளை ஜெயலலிதா பாதுகாப்பார்: அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

சிறுவாணி நீரை நம்பியிருக்கும் விவசாயிகளை ஜெயலலிதா பாதுகாப்பார்: அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
Updated on
3 min read

தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறுவாணி ஆற்று நீரினை நம்பியிருக்கின்ற விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் என்று அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் சிறுவாணி மற்றும் காவிரி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்துப் பேசியதாவது:-

''சிறுவாணி நதி, அட்டப்பாடி பள்ளத்தாக்கில், கேரள மாநிலத்தில் உற்பத்தி ஆகி அம்மாநிலத்திற்குள்ளேயே ஓடி, பவானி ஆற்றுடன் கேரள எல்லைக்குள்ளேயே சேருகின்ற நதி ஆகும். இந்த ஆறு, பன்மாநில நதியான காவேரி நதியின் துணைக் கிளை நதியாகும். எனவே, 1956 ஆம் ஆண்டு பன்மாநில நதிநீர் தாவா சட்டம் சிறுவாணி நதிக்கும் பொருந்தும்.

10.5.1969 அன்று திருவனந்தபுரத்தில், மத்திய பாசன மற்றும் மின் துறை அமைச்சர், கேரள அன்றைய முதல்வர் மற்றும் தமிழ்நாட்டின் அன்றைய முதல்வர் கருணாநிதி ஆகியோரிடையே நடைபெற்ற கூட்டத்தில், பவானிப் படுகையில் அட்டப்பாடி பள்ளத்தாக்கில் கேரளா பாசனம் செய்வதற்காக கோயம்புத்தூர் நகரத்தின் குடிநீர்த் தேவைக்காக சிறுவாணி அணை கட்டி முடிக்கப்பட்டவுடன், 2.50 டி.எம்.சி. அடி நீரை உபயோகித்துக் கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டது.

காவிரி நடுவர் மன்றத்தில், கேரள அரசு, பவானிப் படுகையில், 27 டி.எம்.சி. அடி நீர் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரியது. குறிப்பாக, அட்டப்பாடி பள்ளத்தாக்கில் பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைக்காக 4.5 டி.எம்.சி அடி நீர் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரியது.

இது 1969-ல் எடுக்கப்பட்ட முடிவான 2.5 டி.எம்.சி. அடியை விட அதிகமாக உள்ளதால், தமிழ்நாடு அரசு, கேரளாவின் இக்கோரிக்கையினை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனையின் பேரில் காவேரி நடுவர் மன்றத்தில் தகுந்த ஆதாரங்களுடன் தமிழ்நாடு அரசு அதன் வாதத்தை எடுத்துரைத்தது.

தமிழ்நாட்டின் வாதத்தைக் கேட்டறிந்த காவிரி நடுவர் மன்றம், அதன் 5.2.2007-ஆம் நாளிட்ட இறுதி ஆணையில், கேரள பவானி படுகைக்கென 6 டி.எம்.சி. அடி நீரை ஒதுக்கீடு செய்தது. இதில், அட்டப்பாடி பாசன உபயோகத்திற்காக 2.87 டி.எம்.சி. அடி நீரை மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்றம், பவானி படுகையில் கேரள அரசிற்கு ஒதுக்கீடு செய்துள்ள 6 டிஎம்சி அடிக்கும் கூடுதலாக நீர் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து ஏப்ரல் 2007ல் உச்ச நீதிமன்றத்திலும், காவிரி நடுவர் மன்றத்திலும், கேரள அரசு தாக்கல் செய்த மனுக்களில் குறிப்பிட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின் மீது தமிழ்நாட்டிற்கு உள்ள சாதக பாதகங்களை கண்டறிந்து அவற்றின் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து கேரள மற்றும் கர்நாடக அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீர் அளவு அதிகம் என கருதி, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதேபோல் கேரள அரசும் கர்நாடக அரசும் மனு தாக்கல் செய்துள்ளது. இம்மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் 18.10.2016 அன்று விசாரணைக்கு வர உள்ளது

இதற்கிடையே, அட்டப்பாடி பாசனத்திட்டத்திற்காக கேரள அரசு அணை ஒன்று கட்டுவதற்கான முயற்சி மேற்கொண்டு வருகிறது என ஊடகங்களில் செய்திகள் வந்ததை அடுத்து, முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு 21.6.2012-ம் நாளிட்டு அனுப்பிய கடிதத்தில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையின் மீது உச்ச நீதிமன்றத்தில், கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழ்நாடு அரசுகள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் மற்றும் காவிரி நடுவர் மன்றத்தில் விளக்கங்கள் கோரும் மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில், அந்த இறுதி ஆணை மத்திய அரசின் அரசிதழில் வெளிப்படும் வரையிலோ அல்லது நீதிமன்ற உத்தரவுகள் வரும் வரையிலோ கேரள அரசு காத்திருந்து, அவைகளில் முடிவு தெரியும் வரையில் எந்த ஒரு திட்டத்தையும் எடுத்துக் கொள்ளக் கூடாது என தெரிவித்தார்.

மேலும், பிரதமர் இப்பிரச்சினையில் தலையிட்டு, கேரள அரசு, கட்ட உத்தேசித்துள்ள அட்டப்பாடி பாசனத் திட்டம் அல்லது வேறு எந்த ஒரு திட்டத்தையும் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணைக்கு முரணான வகையில் கட்ட வேண்டாம் என அறிவுரை வழங்கும்படி கேட்டுக்கொண்டார். மத்திய நீர் வளக்குழுமம் எந்த ஒரு தொழில் நுட்ப அனுமதியும் வழங்கக் கூடாது எனவும் அறிவுறுத்தும்படி கேட்டுக் கொண்டார்.

தமிழக அரசு, அட்டப்பாடியில் கேரள அரசு அணை கட்டுவது குறித்து கேரள அரசுக்கு 13 கடிதங்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வந்தன. மேலும், மத்திய அரசின் நீர் ஆதார அமைச்சகத்திற்கு 7 கடிதங்கள், மற்றும் மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சத்திற்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன. மத்திய நீர் ஆதார அமைச்சகம் அதன் 19.9.2013-ஆம் நாளிட்டு இவ்வரசுக்கு அனுப்பிய கடிதத்தில், இத்திட்டத்திற்கு உபயோகிக்கப்பட உள்ள நீர் குறித்து, சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவினைப் பெற்ற பின்னர், காவிரி நடுவர் மன்றத்தின் இசைவைப் பெறும் படி கேட்டுக் கொண்டது. மேலும், கேரள அரசிடமிருந்து இதுவரையில் பதில் ஏதும் வரப் பெறவில்லை எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அனுப்பிய கடிதங்களுக்கு உரிய பதில் ஏதும் அளிக்காமல் கேரள அரசு தன்னிச்சையாக அட்டப்பாடி பள்ளத்தாக்குத் திட்டத்திற்கான சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள வல்லுநர் மதிப்பீட்டுக்குழுவின் நிலையான ஆய்வு வரம்புகள் அளிக்க வேண்டி கேட்டுக் கொண்டது.

இக்குழுவின் 28 மற்றும் 29 மார்ச், 2016-ல் நடைபெற்ற 92-வது கூட்டத்தில், கேரள அரசின் இக்கருத்துரு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தமிழக அரசின் கருத்தினைப் பெறுமாறும், தமிழக அரசு அதன் கருத்தினை அளித்தவுடன் தான் புதியதாக கேரள அரசின் இக்கருத்துரு பரிசீலிக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டது.

இதனையடுத்து, தமிழக அரசுக்கு 10.5.2016 அன்று கேரள அரசு அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றது. இதனைப் பரிசீலனை செய்தபோது, இத்திட்டத்திற்கான தொழில் நுட்ப சாத்தியக் கூறுகளுக்கான அனைத்து விவரங்களையும், கேரள அரசு அளிக்கவில்லை. எனவே, இது குறித்து தொழில்நுட்ப நிர்வாக மற்றும் சட்ட ரீதியாக, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு வந்தபோது, கேரள அரசு, தமிழக அரசின் கருத்தினை ஏற்கெனவே கேட்டதைப் பெறாமல், தன்னிச்சையாக இத்திட்டத்திற்கான பரிந்துரையை வேண்டி மீண்டும் வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவினை அணுகியது. இக்குழுவின் 11-12 ஆகஸ்ட், 2016-ல் நடைபெற்ற கூட்டத்தில், ஒரு பொருள் நிரலாக சேர்க்கப்படாமல், ஒரு கூடுதல் பொருள் நிரலாக தன்னிச்கையாக வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இம்மாதிரியான உணர்வுபூர்வமான நதிநீர் பிரச்சினைகளில், தமிழ்நாட்டின் கருத்தினைப் பெறாமல், இக்குழு கேரள அரசின் கோரிக்கையை, தமிழக அரசுக்கு விவரங்கள் ஏதும் தெரிவிக்காமல், தன்னிச்சையாக பரிசீலனைக்கு எடுத்து முடிவெடுத்தது மிகவும் தவறான முன்னுதாரணமாகும்.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா 27.8.2016 நாளிட்டு பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில், இப்பிரச்சினையில் பிரதமர் உடனடியாக தலையிட்டு, வல்லுநர் மதிப்பீட்டுக்குழு, கேரள அரசு, இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கான நிலையான ஆய்வு வரம்புகள் மேற்கொள்வதற்கு வழங்கிய பரிந்துரையை உடனடியாக திரும்பப் பெற வேண்டி மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் அதனைச் சார்ந்த முகமைகளுக்கு அறிவுரை வழங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், காவிரிப்படுகையில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு நடைமுறைக்கு வரும் வரையிலும் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இறுதியாக்கம் செய்யப்படும் வரையிலும் கேரள மற்றும் கர்நாடக அரசுகள் எந்த ஒரு திட்டத்தையும் மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கக்கூடாது எனவும் அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறுவாணி ஆற்று நீரினை நம்பியிருக்கின்ற விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்'' என்று அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in