

பூந்தமல்லி: பல்லி விழுந்து கிடந்த உணவை சாப்பிட்ட 3 பள்ளிகளின் 19 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
தமிழக அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு மாங்காடு பகுதியில் உள்ள தனியார் கேட்டரிங் நிறுவனம் தயாரிக்கப்பட்டு, மாங்காடு, குன்றத்தூர், பூந்தமல்லி, திருமழிசை பகுதிகளில் உள்ள 12 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1,300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தின் உணவுக் கூடத்தில் நேற்று காலை உணவாக பொங்கல் தயாரிக்கப்பட்டு வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. முதலில் பூந்தமல்லி-சிவன்கோயில் தெருவில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிக்கு வழங்கப்பட்டது.
அதை மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் அதில் பல்லி இறந்துகிடந்தது தெரியவந்தது.
அந்த உணவை சாப்பிட்ட 11 மாணவ, மாணவிகளுக்கு லேசான வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, அவர்கள் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல் பூந்தமல்லி வரதராஜபெருமாள் கோயில் பின்புறம் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 7 பேரும், கீழ்மாநகர் அரசு தொடக்கப் பள்ளியில் ஒரு மாணவி என 8 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், 2 பேருக்கு வயிற்று வலி இருந்ததால், அவர்கள் மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த 19 பேரும் மாலையில் பத்திரமாக வீடு திரும்பினர்.
தொடர்ந்து பல்வேறு துறைகளின் அதிகாரிகள் குறிப்பிட்ட பள்ளிகளிலும், உணவு தயாரிப்பு கூடத்திலும் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளிகளில் வழங்கப்பட்ட உணவு மாதிரிகள் கிண்டியில் உள்ள ஆய்வகத்துக்கு சேதனைக்காக அனுப்பப்பட்டது.
ஆய்வின் முடிவில் தவறுகள் இருப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.