

கல்லூரி மாணவரை துப்பாக்கி முனையில் கடத்திய சக மாணவர்கள் கைது, காதலியிடம் பேசியவரை துப்பாக்கியால் சுட்ட இளைஞர், ரியல் எஸ்டேட் அதிபரை துப்பாக்கியால் சுட்ட நடிகர் எனத் தொடர்ச்சியாக வரும் செய்திகள் தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் தலைதூக்குவதையே காட்டுகிறது.
"ஒரு தனிநபர் தனது பாதுகாப்பிற்காக துப்பாக்கி வாங்குதற்கான உரிமம் பெறுவதற்கு காவல்துறை ஆணையர் அல்லது கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுக்க வேண்டும். அவருக்கு உண்மையிலேயே உயிருக்கு ஆபத்தான சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருக்கிறதா, கொலை முயற்சி சம்பவங்கள் ஏதும் நடந்திருக்கிறதா, அவருக்கு துப்பாக்கி தேவைதானா என்பது குறித்து உள்ளூர் காவல் நிலையம் மூலம் விசாரணை நடத்தப்பட்டு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்படும்.
பின்னர் உள்துறை அமைச்சகத்திற்கு காவல்துறை அதிகாரிகள் தகவல் கொடுக்க, உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் அந்த நபருக்கு துப்பாக்கி வாங்குவதற்கான உரிமத்தினை காவல்துறையினர் வழங்கு வார்கள். இதுதான் துப்பாக்கியை வைத்துக்கொள்வதற்கான நடைமுறை.
"சிங்கிள் பேரல்", "டபுள் பேரல்", "பிஸ்டல்" என எந்த துப்பாக்கி வாங்கலாம் என்பது குறித்தும் உரிமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த உரிமத்தைப் பெற்ற துப்பாக்கி விற்கும் டீலர்களிடம் காண்பித்து துப்பாக்கி வாங்கிக் கொள்ளலாம். இப்படி தமிழகம் முழுவதும் 9,700 பேர் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர். சென்னையில் மட்டும் 3,300 பேர் வைத்துள்ளனர்.
ஆனால், உரிமம் பெறாமல் கள்ள துப்பாக்கி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை இதைவிட பலமடங்கு அதிகம் என தெரியவருகிறது. குட்கா, பான்மசாலா போன்ற போதைப் பொருட்கள் வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு எப்படி பழக்கப்படுத்தப்பட்டதோ, அதே போன்றுதான் துப்பாக்கி கலாசாரமும் வட மாநிலங்களில் இருந்தே நமக்கு வந்தது.
பீகாரை சேர்ந்த ரஞ்சித் கோசுவாமி என்பரின் வங்கி கணக்கிற்கு பல மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டதால், நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கள்ளச்சந்தையில் துப்பாக்கி விற்கும் டீலர் என்பது தெரியவந்தது. அவரது வங்கி கணக்கில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேரும் பணம் போட்டிருந்தனர். அவர்கள் தமிழகத்தில் திருட்டு துப்பாக்கி விற்கும் டீலர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அதன் பின்னரே தமிழகத்தில் துப்பாக்கி விற்பனை கொஞ்சம் குறைந்தது.
சில ரவுடிகளும், கொலை, கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மட்டுமே துப்பாக்கி வாங்க அதிக முயற்சி எடுக்கின்றனர். சொந்த பாதுகாப்பிற்காக துப்பாக்கி வாங்குபவர்களும் சமீபகாலமாக அதிகரித்துள்ளனர். வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு படிக்க வரும் பல மாணவர்களிடம் கூட துப்பாக்கி உள்ளது. இவர்கள் திருட்டு துப்பாக்கி விற்கும் டீலர்களாகவும் செயல்படுகிறார்கள்.
சென்னை மூர் மார்க்கெட் மற்றும் பர்மா பஜாரில் கள்ளமார்க்கெட்டில் துப்பாக்கி விற்கும் கான் என்பவரை சந்தித்து பேசியபோது, "பீகார், ஜார்க்கண்ட், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் கள்ள துப்பாக்கி தயார் செய்யும் தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளன. அங்கிருக்கும் டீலர்களுடன் நாங்கள் தொடர்பில் இருப்போம். நம்பிக்கையானவர்கள், தெரிந்தவர்களுக்கு மட்டுமே துப்பாக்கி விற்பனை செய்யப்படும்.
அந்த மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் ரயில்கள், சரக்கு வாகனங்களில் துப்பாக்கிகளையும் சேர்த்துக் கொண்டு வந்து விடுவோம். குறிப்பாக பொம்மைகள், மின்னணு சாதனங்களுடன் சேர்த்து துப்பாக்கியை தனித்தனி உதிரிபாகங்களாகப் பிரித்து அனுப்பிவிடுவார்கள். இது துப்பாக்கியின் உதிரி பாகம் என்று கண்டுபிடிக்க முடியாதபடி மற்ற பொருட்களுடன் சேர்த்து பேக் செய்யப்பட்டிருக்கும்.
தமிழகத்திற்குள் கடத்தும்போது சாலை போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்துவோம். சில இடத்தில் வைக்கோல் கட்டுகளுக்கு இடையில் வைத்துகூட கடத்தி இருக்கிறோம்.
மத்திய அரசின் ஆயுத தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளமே கொடுக்கப்படுகிறது. அந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு அவர்களை திருட்டு துப்பாக்கி செய்ய பயன்படுத்துவோம். துப்பாக்கி வாங்க வருபவர்கள் பலர் வெளிநாட்டு துப்பாக்கிகளையே விரும்புவார்கள். இதனால் இங்கு தயாரிக்கும் துப்பாக்கிகளில் "மேட் இன் யூ.எஸ்", "யூ.கே" என்று போட்டு விற்பனை செய்கிறோம்.
தமிழகத்தில் சாதாரண நாட்டுத் துப்பாக்கி மட்டுமே தயார் செய்கிறார்கள். இதை ரூ.2,500க்கு கூட விற்கின்றனர். ஆனால் நாட்டுத் துப்பாக்கிக்கு வரவேற்பு இல்லை. சமீபத்தில் கூட சென்னை செங்குன்றத்தில் ஒரு கள்ளத்துப்பாக்கி கேட்பாரற்று கிடந்தது குறிப்பிடத்தக்கது. வட மாநிலத்தில் நவீன தொழில்நுட்பத்தில் தொடர்ச்சியாக சுடும் வசதியுடைய தானியங்கி துப்பாக்கியைகூட எளிதாக தயாரிக்கின்றனர். பத்தாயிரம் ரூபாய் முதல் இருபது லட்சம் ரூபாய் வரை துப்பாக்கிகள் கிடைக்கின்றன," என்றார்.
தமிழகத்தில் துப்பாக்கிகள் விற்பனை செய்யும் அங்கீகாரம் பெற்ற டீலர்கள் 31 பேர் உள்ளனர். இதில் 12 பேர் சென்னையில் உள்ளனர். வால்டாக்ஸ் சாலை அருகே இருக்கும் ஒரு டீலரை சந்தித்து பேசியபோது, "உரிமம் இல்லாமல் பலர் துப்பாக்கி கேட்டு வருவார்கள். வியாபாரத்தை இழக்க விரும்பாத நாங்கள் கள்ள மார்க்கெட்டில் துப்பாக்கிகளை விற்பனை செய்வோம். கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்யும் சிலர் அங்கீகாரம் பெற்ற டீலர்களை குறிவைத்து துப்பாக்கிகளை திருடிச் செல்கின்றனர். சில காரணங்களால் டீலர்கள் யாரும் போலீஸில் புகார் செய்வதில்லை" என்றார்.
தமிழகத்தில் 830 வழக்குப் பதிவு
தமிழகத்தில் திருட்டு துப்பாக்கி வைத்திருந்ததாக 2009ம் ஆண்டில் 573 வழக்குகளும், 2010ல் 634 வழக்குகளும், 2011-ல் 770 வழக்குகளும், 2012ல் 830 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்தனை வழக்குகளிலும் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 151 திருட்டு துப்பாக்கி தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இதில் தமிழகத்தில் இரண்டு தொழிற்சாலைகளும் அடங்கும்.
கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் 80,109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அதிக பட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 53,141, மத்தியபிரதேசத்தில் 10,075, மேற்குவங்கத்தில் 3,582, பீகாரில் 2,982 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவான வழக்குகளே பதிவானாலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதன் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.