

கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள சர்க்கரை நோயாளிகள் நன்னாரி சாறு அருந்தலாம் என பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை சித்தா பிரிவு மருத்துவர் தில்லைவாணன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. பகலெல்லாம் வெயிலில் சுற்றித் திரிவோர், அலுவலகத்தில் வேலை செய்வோர் பெரும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். பகல் முழுவதும் கொளுத்தும் வெயிலால் இரவில் புழுக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் இரவில் உறக்கத்தை இழந்து மக்கள் தவிக்கின்றனர். இடையிடையே மின் தடையும் ஏற்படுகிறது.
வெயில் கொடுமையால் உடல் சூடு அதிகரித்து, பல்வேறு நோய் தாக்குதலுக்கு மக்கள் ஆளாகிறார்கள்.
வெப்பத்தைத் தடுக்க எளிமையான வழிமுறைகள் சித்தா மருத்துவத்தில் இருப்பதாக, பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையின் சித்தா பிரிவு மருத்துவர் தில்லைவாணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறும்போது, ‘‘உடல் சூட்டால் சீறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். இதைத் தடுக்க வாரத்துக்கு 2 நாட்கள் எண்ணெய் குளியல் எடுக்கலாம். எண்ணெய் குளியலின்போது ‘சந்தனாதி தைலம்’ பயன்படுத்தினால், உடலுக்கு மேலும் குளிர்ச்சி தரும்.
இதன் மூலம் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். பெரும்பாலும் கோடைக் காலங்களில் உடல் சூடு அதிகரித்து, பித்தம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். இதனால் மஞ்சள் காமாலை, வயிற்றுப் புண், வயிறு எரிச்சல், மலச்சிக்கல் ஏற்படும்.
இதைப் போக்க நன்னாரி மணபாகை நீரில் கலந்து அளவோடு அருந்த வேண்டும். சர்க்கரை நோயாளிகள் வெறும் நன்னாரி சாறு மட்டும் அருந்தலாம். தினமும் 2 வேலை 10 முதல் 15 மி.லிட்டர் அளவுக்கு நன்னாரி மணபாகு அருந்தினால், உடல் சூடு குறையும்.
சீரகத்தை கசாயம் வைத்து தினமும் 3 வேலை குடித்தால் பித்தம் தொடர்பான பிரச்சினைகள் தீரும். அதேபோல், வெந்தயத்தை தூளாக்கி தண்ணீரில் கலந்தும் அருந்தலாம். வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்தும் குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் கலந்த தண்ணீர் மிகவும் நல்லது. இது சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கும். தினமும் 5 கிராம் வெந்தயத்தை தண்ணீரில் கலந்து குடித்தால் சீறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல், அல்சர், மலச்சிக்கல், வயிற்று புண் விரைவில் குணமாகும்.
உடல் எடைக்கு ஏற்ப தண்ணீர் குடிக்க வேண்டும். உதாரணமாக, 45 கிலோ எடை உள்ளவர்கள், 2 லிட்டர் தண்ணீரும், 65 கிலோ எடை உள்ளவர்கள் 3 லிட்டர் தண்ணீரும், 75 கிலோ எடை உள்ளவர்கள் 3.5 லிட்டர் தண்ணீரும், 85 கிலோ எடை உள்ளவர்கள் 4 லிட்டரும், அதற்கு மேல் எடை உள்ள வர்கள் 5 லிட்டர் வரை தண்ணீர் அருந்தலாம்.
அதேபோல், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ‘பதிமுக கட்டை’- ‘வெட்டிவேர்’ ஆகியவற்றை வாங்கி நீரில் ஊறவைத்து அருந்தலாம். இது எல்லாவற்றுக்கும் மேலாக கோடைக் காலம் முடியும் வரை உடலுக்கு கொழுப்பு சேர்க்கும் உணவுப் பொருட்கள், மசாலாப் பொருட்கள், அதிக உப்பு கொண்ட உணவுப் பொருட்கள், காரம் உள்ளிட்ட பொருட்களை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. இறைச்சி வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
மோரை சூடாக்கி அதில் மஞ்சள் பொடி கலந்து தாளித்து குடித்தால் உடலுக்கு அதிக நன்மை தரும். குறிப்பாக, மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாளித்த மோரை தினமும் 2 லிட்டர் அருந்தலாம்’’ என்றார்.