Published : 17 May 2017 08:11 AM
Last Updated : 17 May 2017 08:11 AM

தலைமைச் செயலகத்தில் மத்திய அமைச்சர் ஆய்வு: மாநில சுயாட்சி கொள்கைக்கு விரோதமான செயல் - திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தலைமைச் செயலகத்தில் மத்திய அமைச்சர் ஆய்வு நடத்தியது, மாநில சுயாட்சிக்கு விரோதமான செயல் என்று திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டா லின் குற்றம்சாட்டினார்.

திமுக எம்எல்ஏக்களின் அவசர ஆலோசனைக் கூட்டம், கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. ஸ்டாலின் தலைமை யில் காலை 11 மணிக்கு தொடங் கிய கூட்டம் 11.45 மணிக்கு முடிவடைந்தது. திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது, தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்ட வலி யுறுத்துவது என 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் முடிவடைந்த பிறகு நிருபர்களிடம் ஸ்டாலின் கூறிய தாவது:

திமுக தலைவர் கருணாநிதி யின் சட்டப்பேரவை 60 ஆண்டுகால வைர விழாவையொட்டி அதற்கு பாராட்டு சொல்லக்கூடிய வகை யில் ஒரு தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. நியாயமாக பட்ஜெட் கூட்டத்தொடர் முடி வடைந்து பின்னர் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடை பெற்று அதற்கு நிதி ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால், தற்போதுள்ள சூழலில் சட்டப்பேரவையைக் கூட்டினால், எடப்பாடி பழனி சாமி தலைமையிலான பினாமி தொடர்ந்து இருக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட் டுள்ளது.

மேலும், கருணாநிதியின் 60 ஆண்டுகால சட்டப்பேரவை சிறப்புகளைப் பற்றி எங்கள் உறுப்பினர்கள் பேசி, அவை யிலே அது பதிவாகிவிடக் கூடாது என்ற நோக்கத்தோடு அரசியல் நாகரிகமே இல்லாமல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை நடத்தாமல் உள்ளனர்.

இதுகுறித்து ஏற்கெனவே தமிழக பொறுப்பு ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளோம். உடனடி யாக சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும். குடிநீர் பஞ்சம், விவசாயிகள் தற்கொலை, போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம், மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வு போன்ற பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப் பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறோம். விரைவில் அதற்கான பதில் வரும் என்று எதிர்பார்த்திருக்கிறோம். முறையான பதில் வரவில்லை யெனில் மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்போம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

சிபிஐ போன்ற அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன் படுத்துகிறது என ஏற்கெனவே குற்றச்சாட்டு வைத்திருந்தீர்கள். தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டி ருக்கிறதே?

சிபிஐ, வருமானவரித் துறை போன்ற அமைப்புகள் மீது ஏற்கெனவே தெரிவித்த குற்றச் சாட்டைதான் மீண்டும் வழி மொழிகிறேன். மத்திய நிதித்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், இந்த சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்வார்.

கருணாநிதியின் சட்டப் பேரவை வைர விழா ஏற்பாடுகள் குறித்து?

வைர விழா ஏற்பாடு கள் சிறப்பாக நடந்துகொண் டிருக்கின்றன. ஓரிரு நாளில் விழா ஏற்பாடுகள் முழுமை பெறும். விழாவில் சோனியா காந்தி கலந்துகொள்வாரா அல்லது ராகுல்காந்தி பங்கேற்பாரா என்பது இன்று (செவ்வாய்க்கிழமை) மாலைக்குள் தெரியும். அதன் பிறகு அதுகுறித்து முறையாக அறிவிக்கப்படும்.

சென்னை தலைமைச் செய லகத்தில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆய்வு நடத்தி யிருக்கிறாரே?

இது, மாநில சுயாட்சிக்கு விரோதமான செயல். இதிலிருந்து, இந்த ஆட்சி மத்திய அரசுக்கு எவ்வாறு அஞ்சி, நடுங்கி செயல்படுகிறது என்பது தெரிகிறது. தமிழகத்தையே மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டனர்.

இவ்வாறு ஸ்டாலின் பதில் அளித்தார்.

பேரவைத் தலைவர், முதல்வருடன் சந்திப்பு

சட்டப்பேரவை திமுக கொறடா அர.சக்கரபாணி தலைமையில் கு.பிச்சாண்டி, கோவி செழியன், அனிதா ராதாகிருஷ்ணன், செங்குட்டுவன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தலைமைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமி, பேரவைத் தலைவர் பி.தனபால் ஆகியோரை சந்தித்து திமுக எம்எல்ஏக்கள் கூட்ட தீர்மானங்களை வழங்கினர்.

பின்னர் சக்கரபாணி கூறும்போது, ‘‘சட்டப்பேரவையை கூட்ட வேண்டும், மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்த வேண்டும் என்பது தொடர்பான தீர்மானத்தை பேரவைத் தலைவர், முதல்வரிடம் அளித்தோம். விரைவாக சட்டப்பேரவை கூட்டத் தொடரை நடத்துவதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர்’’ என்றார்.

இதைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் தனபாலை முதல்வர் பழனிசாமி சந்தித்து பேரவையைக் கூட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். எனவே, விரைவில் பேரவைக் கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x