

தமிழகத்தில் முழு மதுவிலக்கு கோரி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஓரளவு ஆதரவு காணப்பட்டது. அதேவேளையில், மாநிலம் முழுவதும் மதுவிலக்கு போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.
மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் அமைப்புகள் விடுத்த அழைப்பின்படி, மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, பல்வேறு கட்சிகள், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் வெவ்வேறு வடிவிலான மதுவிலக்கு போராட்டங்கள் மாநிலம் முழுவதும் பரவலாக தீவிரமாக நடந்தன.
குறிப்பாக, பல்வேறு நகரங்களில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டக் களத்தில் இறங்கினர்.
போராட்டம் நடத்தியவர்களை போலீஸார் கைது செய்தனர். முழு அடைப்பில் கன்னியாகுமரி மாவட்டம் தவிர பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. ஆனால், மறியல் மற்றும் போராட்டங்கள் தமிழகம் முழுக்க வலுபெற்று இருந்தன.
அதேவேளையில், பதற்றமான அனைத்துப் பகுதிகளிலும் உரிய போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகளில் விற்பனை நடைபெற்றது.
கோவை
கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசியல் அமைப்புகள் மதுக்கடைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் இறங்கின. இதில் மாவட்டம் முழுவதும் சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி நுழைவு வாயில் முன்பு திரண்ட மாணவர்கள் மதுக்கடைகளை உடனடியாக மூடக் கோரினர். மது ஒழிப்புக்காக போராடும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பின்னர் கலைந்து சென்றனர். மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் காரணமாக, அரசு கலைக் கல்லூரியில் இன்று காலையில் வகுப்புகள் நடக்கவில்லை.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்ட மற்றும் மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட சுமார் 400 பேர் கைதுசெய்யப்பட்டனர்.விருதுநகர் மாவட்டத்தில் அசம்பாவிதங்களைத் தடுக்க 204 டாஸ்மாக் கடைகளுக்கும் போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரை
மதுவிலக்கு வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வழக்கறிஞர் ஷாஜி செல்லம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் மாவட்ட நீதிமன்றம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னதாக சட்டக்கல்லூரியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட மாணவர்கள், நீதிமன்றம் முன்பு மறியலில் ஈடுபட்ட பின்னர், அரசு விரைவு போக்குவரத்து கழக அலுவலகம் அருகிலுள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர்.
(மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட மாணவரை தூக்கிச் செல்லும் போலீஸார். | படம்: கிருஷ்ணமூர்த்தி)
டாஸ்மாக் கடை பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸார், மாணவர்களை தடுத்தனர். அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. பின்னர் 20-க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.
தேனி
தேனி பழைய பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மதிமுக மாவட்டச் செயலாளர் சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தேமுதிக, விடுதலை சிறுத்தை, மார்க்சிஸ்ட் கட்சிகளின் மாவட்டச் செயலர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
போடி, உத்தமபாளையம், ஆண்டிபட்டி, பெரியகுளம் உட்பட பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி மாவட்டம் முழுவதும் சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கறிஞர்கள்
தேனி மாவட்ட வழக்கறிஞர் சங்கச் செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பழைய பஸ் நிலையம் எதிரே இருந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெயர் பலகையை சேதப்படுத்தினர்.
மாவட்டத்தில் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் அனைத்து கடைகளும் திறந்திருந்தன.
புதுச்சேரி
சென்னை, புதுச்சேரியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்தும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவர் பூபாலன் தலைமையில், சட்டக்கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் இன்று புதுச்சேரி காமராஜர் சிலை சந்திப்பில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது போலீஸாரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது பற்றி தகவல் அறிந்து வந்த புதுச்சேரி பெரியகடை போலீஸார், சாலை மறியலில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோரை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 116 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்
மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்ளிட்ட 80 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை
சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ எஸ்.குணசேகரன் தலைமையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கையில் மட்டும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை உள்ளிட்ட அனைத்து இடங்களில் வழக்கம்போல் கடைகள் திறந்திருந்தன.
காரைக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் 6 பேர், மறவமங்கலத்தில் 9 பேர், திருப்புவனத்தில் விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகள் 15 பேர், சருகணியில் 11 பேர், காளையார்கோவிலில் 23 பேர் என மொத்தம் 64 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்
மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சியினர் ராமநாதபுரத்தில் அரண்மனை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மதிமுக மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார்.
தொண்டியில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜைனுல் ஆபிதீன் தலைமையில் மதுக்கடைக்கு பூட்டுப்போட முயன்ற அக்கட்சியின் மாவட்டத் தலைவர் சாதிக் பாட்ஷா, திருவாடானை ஒன்றிய மதிமுக செயலாளர் காமராஜ் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் பந்த் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள், வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் திறந்து செயல்பட்டன. மேலும், அரசு மற்றும் தனியார் பஸ்கள், மினி பஸ்கள், லாரிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் ஓடின. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 16 பேர், மதிமுகவினர் 13 பேர், தேமுதிகவினர் 7 பேர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மொத்தம் 41 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், ரவுடிகள் 29 பேரும் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்
(வேலூரில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் | படம்: மணிநாதன்)
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட் 167 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தையொட்டி 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. 25க்கும் மேற்பட்ட பஸ் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு அடைப்பை முன்னிட்டு முந்தையநாள் இரவிலிருந்தே பதட்டமான சூழல் நிலவியது. குறிப்பாக கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது.
பஸ்மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்ததை தொடர்ந்து அரசு பஸ்களில் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு பஸ்களில் செல்லும் மாணவ, மாணவியர்கள் அச்சத்துடனே பயணம் செய்தனர். அவர்கள் உரிய நேரத்தில் கல்வி கூடங்களுக்கு செல்லமுடியாமல் அவதி அடைந்தனர்.
அரசியல் கட்சித் தலைவர்கள் கைதாகி விடுவிப்பு
சென்னை மயிலாப்பூரில் மது ஒழிப்புப் போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலை விடுவிக்கப்பட்டனர்.
''மது ஒழிப்புப் போராட்டம் என்பது அரசியல் கட்சிகளின் போராட்டம் அல்ல; மக்கள் போராட்டம். அந்த வகையில் இன்றைய போராட்டம் வெற்றி பெற்றது. மதுவிலக்கை அமல்படுத்தும்வரையில் போராட்டம் ஓயாது.
மதுவிலக்கு அமல்படுத்துவது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும். போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும். பச்சையப்பன் கல்லூரி மாணவர்களே உடனே விடுவிக்க வேண்டும்'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
முன்னதாக, இந்த முழு அடைப்பு போராட்டம் வெற்றி என்று குறிப்பிட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, "தமிழகம் முழுவதும் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அடித்தும், உதைத்தும் கைது செய்தது, ஜெயலலிதா அரசின் அடக்குமுறை" என்று சாடினார்.