

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் மின்னணு கட்டண வசூல் முறையை டிசம்பருக்குள் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை பெங்களூர் சாலையில் இதற்கான சோதனைப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மொத்தம் 184 சங்கச் சாவடி மையங்கள், தனியார் நிறுவனம் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் கட்டுப்பாட்டில் 4,832 கி.மீ. தூர தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. தமிழகத்தில் 35-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி மையங்கள் உள்ளன. ஒவ்வொரு மையத்திலும் கட்டணங்கள் மாறுபடுகின்றன.
நெடுஞ்சாலைகள் அமைத்து தரும் தனியார் நிறுவனங்கள், அடுத்த 10 முதல் 15 ஆண்டுகள் வரை கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என ஒப்பந்தம் கூறுகிறது. ஆனால், இதுவரை எந்த சுங்கச் சாவடியும் மூடப்படவில்லை. தொடக்கத்தில் 40 கி.மீ.க்கு சுங்கச்சாவடிகளில் தொடக்கக் கட்டணமே ரூ.20 ஆக இருந்தது. தற்போது ரூ.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சில இடங்களில் ரூ.150 வரை வசூலிக்கப்படுகிறது. எனவே, கட்டண வசூலை எதிர்த்து பலரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மற்றொருபுறம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசலுடன் காலதாமதமும் ஏற்படுகிறது. நெரிசலைத் தவிர்க்க, சுங்கச்சாவடிகளில் ‘மின்னணு கட்டண வசூல் முறை’ அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான முதல்கட்ட சோதனைப் பணிகள் நடந்து வருகின்றன.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் நிற்கவேண்டிய நிலை உள்ளது. எனவே, மின்னணு கட்டணம் வசூல் முறையை அமல்படுத்த உள்ளோம். இதற்கான சோதனை பணிகள் சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் நடந்து வருகிறது. நெமிலி மற்றும் சென்னாசமுத்திரம் சுங்கச்சாவடிகளில் மின்னணு கட்டண வசூல் நடந்து வருகிறது. அடுத்ததாக விரைவில் மேலும் 5 சுங்கச்சாவடிகளில் இந்த முறை அறிமுகப்படுத்தப்படும்.
இந்த வசதியை பெற விரும்புவோர், செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வதுபோல், ஏதாவது ஒரு சுங்கச்சாவடியில் தேவைக்கு ஏற்றவாறு பணத்தை மொத்தமாக செலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். பணம் கட்டியதும் உங்கள் வாகனத்தின் முன்பகுதியில் சென்சார் தொழில்நுட்பம் கொண்ட ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்படும். சுங்கச்சாவடிகளை உங்கள் வாகனம் கடக்கும்போது, உங்களின் கணக்கில் இருந்து கட்டணம் கழித்துக் கொள்ளப்படும். ரீசார்ஜ் வசதி கொண்ட வாகனங்களுக்காக எல்லா சுங்கச்சாவடியிலும் 2 பாதைகள் தனியாக அமைக்கப்படும்.
வரும் டிசம்பருக்குள் நாடு முழுவதும் இந்த வசதி அமல்படுத்தப்பட உள்ளது. இதனால், நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் குறைவதுடன் பயணிகள் நேரத்தையும் மிச்சப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.