

புதுச்சேரியிலுள்ள 4 அதிமுக எம்எல்ஏக்களும் ஒட்டுமொத்தமாக டிடிவி தினகரனுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் அதிமுகவுக்கு அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகிய 4 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
அதைத்தொடர்ந்து தமிழகத்தில் கட்சியில் பல்வேறு மாற்றம் ஏற்பட்டாலும் புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் தரப்பில் ஒரே கருத்துடன் நீடித்து வந்தனர்.
தற்போது தமிழகத்தில் தினகரனுக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் புதுச்சேரியில் அதிமுக உறுப்பினர்கள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக சட்டப்பேரவைக்குழு தலைவர் அன்பழகன் தலைமையில் 4 எம்எல்ஏக்களும் கூட்டாக செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், "அதிமுகவில் பிளவு இல்லை. கட்சியை பொருத்தவரை பொதுச்செயலர் சசிகலா- துணைப்பொதுச்செயலர் டிடிவி தினகரன். இவர்கள் தலைமையில்தான் புதுச்சேரி அதிமுக இயங்குகிறது. புதுச்சேரியில் உள்ள 4 எம்எல்ஏக்களும் முழு ஆதரவை தினகரனுக்கு தெரிவிக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.