

விழுப்புரம், மந்தக்கரையில் எம்.ஜி.ஆர். சிலையின் அருகே சாலையோரத்தில் இருக்கிறது அந்த தேநீர் விடுதி. எளிமையாக, அதே நேரத்தில் மிகத் தூய்மையாக இருக்கிறது அந்த தேநீரகம்.
“ஐயா கடும் தேநீரா..? மென் தேநீரா” என்று அந்தக் கடையில் இருப்பவர் கேட்டவுடன் சற்றே திகைத்து, “மென் தேநீர்... இனிப்பு சற்று அதிகமாக” என்று நாமும் தூய தமிழில் சொல்ல, புன்னகைத்தபடியே தேநீர் போட்டு கொடுத்தவரிடம் பணத்தைக் கொடுத்தோம். “ஏற்கப்பட்டது” என்றவாறு மீதி சில்லறையை அந்த கடைக்காரர் வழங்கினார்.
அடுத்தடுத்து வந்த வாடிக்கை யாளர்களுக்கு தேநீர் கொடுத்துக் கொண்டே நம்மிடம் அவர் பேசினார்.
“உளுந்தூர்பேட்டை அருகே ஆலடி கிராமத்தைச் சேர்ந்த என் பெயர் ந.சுப்பிரமணியன். 4-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள் ளேன். 66 வயதாகும் நான் விழுப்புரத்தில் 1980-ம் ஆண்டு தேநீர் கடை வைத்தேன். முடிந்த அளவு தூய தமிழில் பேசுவேன். ஆரம்பத்தில் கடைக்கு வந்து போனவர்கள் நமுட்டுச் சிரிப்புடன் சென்றது உண்டு. பின்னர் என்னிடம் வந்து என்னைப் போலவே, ‘கடும் தேநீர், மென் தேநீர்’ என பேச ஆரம்பித்தனர். என்னிடம் பேசுபவர்களிடம், ‘உங்கள் வீட்டு குழந்தைகளிடம் நல்ல தமிழில் பேசுங்கள்’ என்று மட்டுமே கோரிக்கை வைப்பேன். எனக்கு தமிழ் மீது தீராத காதல் உண்டு” என்று கூறியவர், ‘உங்களுக்கும் தானே!’ என்று நம்மை நோக்கினார்.
பின்னர் அங்கு வந்த சில வாடிக் கையாளர்களிடம் பேசியபோது அவர்கள் கூறியதாவது:
இந்தக் கடையில் எப்போதும் மற்ற கடைகளைவிட விலை ஒரு ரூபாய் கூடுதலாகவே இருக்கும். கறந்த பசும்பாலில் மட்டுமே தேநீர் கலப்பார். பாக்கெட் பால், குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட பாலை உபயோகப் படுத்தமாட்டார். மேலும், கரி அடுப்பையே பயன்படுத்துவார். இவரது நிரந்தர வாடிக்கையாளராக மறைந்த எழுத்தாளர் சு.சமுத்திரம் இருந்தார். ஈழத்தில் இருந்து வந்த தமிழ் எழுத்தாளர் எஸ்.பொ போன்றவர்களும் இவரது வாடிக் கையாளர்களாக இருந்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தேநீர் கடை உரிமையாளர் சுப்பிரமணியன் குறித்து தமிழ்ச் சங்கத் தலைவர் மருத்துவர் பாலதண்டாயுதம் கூறியதாவது:
சுப்பிரமணியனிடம் பேசினால் புதுப்புது தமிழ்ச் சொல்லைக் கற்றுக்கொள்ளலாம். தற்போதைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ற தமிழ் வார்த்தையை கூறுவார். அவர் பேசும்போது தமிழ் எவ்வளவு இனிமையானது என்பது நமக்கு புரியும். இவரால் விழுப்புரத்துக்கு பெருமை என்றார்.
தேநீருக்காக மட்டுமல்லாது இவரது தமிழுக்காகவே இனி மந்தக்கரை பக்கம் வந்து செல்ல வேண்டும் என்று மனதில் தோன்றியது.