

புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
1 மணிக்கு நடைதிறப்பு
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், உதயமார்த்தாண்ட தீபாராதனை, திருப்பள்ளி எழுச்சி, பகலில் காலசந்தி தீபாராதனை, உச்சிகால அபிஷேகம், உச்சிகால தீபாராதனை நடைபெற்றன. மாலையில் சாயரட்சை தீபாராதனை, இராக்கால அபிஷேகம், இரவில் இராக்கால தீபாராதனை, ஏகாந்த தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பள்ளியறை தீபாராதனையுடன் கோயில் நடை திருக்காப்பிடப்பட்டது.
கடற்கரையில் கூட்டம்
செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை இரவு வரை 1 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி முதலே வரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிகம் இருந்ததாக கோயில் பணியாளர்கள் தெரிவித்தனர். பக்தர்கள் 5 மணி நேரத்துக்கும் அதிகமாக வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். திருச்செந்தூர் கடற்கரை முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
காவல் துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொ) இரா.ஞானசேகர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதேபோல், நவத்திருப்பதி கோயில்கள், வனத்திருப்பதி கோயில், தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் கோயில், வைகுண்டபதி பெருமாள் கோயில், வேம்படி இசக்கியம்மன் கோயில், கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் கோயில், கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன.