

திருச்சியில் திமுக மாநாட்டு வளாகத்தில் அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் மு.க.ஸ்டாலின். “இந்த மாநாடு தொடர்பான கேள்விகளை மட் டும் கேளுங்கள். வேறு கேள்விகள் இப்போது வேண்டாம்” என அவர் நிபந்தனை விதித்தார்.
செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: “இம்முறை புதியவர்களுக்கும், இளை ஞர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.
மதுரை மாநகர கட்சி நிர்வாகத்தைக் கலைத்தது கட்சியின் தலைவரும், பொதுச் செயலாளரும் எடுத்த முடிவு. இந்த முடிவால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது” என்றார்.
கட்சியின் தென்மண்டல அமைப்புச் செயலர் அழகிரி ஞாயிற்றுக்கிழமை தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி தொடர்பாக, “அழகிரி தே.மு.தி.க-வுடன் கூட்டணி தேவையில்லை என கூறியுள்ளாரே, தென்மண்டல அமைப்புச் செயலரான தன்னை கலந்து ஆலோசிக்காமல் கட்சி சில முக்கிய முடிவுகளை எடுப்பதாக தெரிவித்துள்ளாரே, கனிமொழியைச் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக் கூறியது போல் ஜனவரி 30-ம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் அழகிரியைச் சந்தித்து வாழ்த்து சொல்வீர்களா?” என கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, “நான் தேவையில்லாததை கேட்பதும் கிடையாது, பார்ப்பதும் கிடையாது” என்கிற ஒரே பதிலை திரும்பத் திரும்பக் கூறிவிட்டு செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டு கிளம்பினார்