நெருங்கும் உள்ளாட்சி தேர்தல்: தேமுதிக பலத்தை நிரூபிக்க மீண்டும் சுறுசுறுப்பாகிறார் விஜயகாந்த் - தனித்துப் போட்டியிடுவதாக தகவல்

நெருங்கும் உள்ளாட்சி தேர்தல்: தேமுதிக பலத்தை நிரூபிக்க மீண்டும் சுறுசுறுப்பாகிறார் விஜயகாந்த் - தனித்துப் போட்டியிடுவதாக தகவல்
Updated on
1 min read

உள்ளாட்சித் தேர்தல் மூலம் தேமுதிகவின் பலத்தை நிரூபித்தே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக உள்ள விஜயகாந்த், மீண்டும் பழையபடி சுறுசுறுப்பாகியுள்ளார். மக்கள் நலக் கூட்டணியுடன் சேர விருப்பம் இல்லாததால், தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி , தமாகாவுடன் இணைந்து தேமுதிக போட்டியிட்டது. இந்த அணியில் 104 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக 2.2 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றது. இதனால், தேமுதிகவின் மூத்த நிர்வாகிகள், மாவட்டம் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் பலரும் திமுக, அதிமுகவில் இணைந்தனர். தேர்தலுக்குப் பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்தும் அமைதி காத்து வந்தார்.

இந்த சூழலில், கடந்த ஒரு வாரகாலமாக அவர் மீண்டும் உற்சாகத்துடன் செயல்படத் தொடங்கியுள்ளார். தேமுதிக தவிர்க்க முடியாத சக்தி என்பதை, வருகிற உள்ளாட்சித் தேர்தல் மூலம் நிரூபிக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ள விஜயகாந்த், தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகி ஒருவர் கூறிய தாவது:

டான்சில்ஸ் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த் தற்போது குணமடைந்துவிட்டார். தினமும் காலை 10 மணிக்கு கட்சி அலுவலகம் வந்து, மதியம் 2 மணி வரை இருக்கிறார். தொண்டர்கள் அனுப்பும் கடிதங்களை தானே படிக்கிறார். முக்கிய பிரச்சினைகள் குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் நேரடியாக விசாரிக்கிறார். தன்னைச் சுற்றியிருந்த அதிகார மையங்களை ஓரங்கட்டி வருகிறார்.

கடந்த ஒரு வாரகாலமாக மீண்டும் பழைய சுறுசுறுப்புடன் அவரைக் காண முடிகிறது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சேலம் ஆத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். மறுநாள் கட்சி தொடக்க விழாவில் கலந்துகொண்டார். ஹோமங்கள், பூஜைகள் முடிந்து காலை 9.01-க்கு கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். இன்று (15-ம் தேதி) பர்கூரில் நடந்த திருமண விழாவில் பங்கேற்றார்.

உள்ளாட்சித் தேர்தல் வேலை யில் அதிக ஈடுபாடு காட்டும் அவர், வேட்பாளர்களை தயார் செய்யும் வேலைகளை தொடங்கச் சொல்லி மாவட்டச் செயலாளர்களுக்கு கடந்த மாதம் உத்தரவிட்டார். இதன் பேரில், 75 சதவீத அளவுக்கு உத்தேச வேட்பாளர்கள் பட்டி யலை மாவட்டச் செயலாளர்கள் தயாரித்துள்ளனர். போட்டியிடுவதற் கான விருப்ப மனுக்கள் அந்தந்த மாவட்ட அமைப்புகள் மூலம் அடுத்த வாரம் முதல் வழங்கப்பட உள்ளன.

திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கும் விஜயகாந்த், மக்கள் நலக்கூட்டணியையும் விரும்பவில்லை. பாஜக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இந்த சூழலில், உள்ளாட்சித் தேர்தல் மூலம் தேமுதிகவின் பலத்தை நிரூபித்தே ஆகவேண்டும் என்ற முடிவில் விஜயகாந்த் உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in